முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்வுக்கு மின்சாரம் வழங்கியமை தொடர்பில் ஆய்வுகளை நடத்தி கணக்காய்வு அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்க உத்தரவிடுமாறு சட்டத்தரணி விஜித குமார உச்சநீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதன்படி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட பொறுப்புக்கோர வேண்டியவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டத்தரணி விஜித குமார மூலம் இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச , நாமல் ராஜபக்ச ஆகியவர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்வு கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்றது.
இதற்கான போக்குவரத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டன. இப்பகுதிக்கு மின்சாரம் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க அப்போதைய மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி 150 மின்விளக்குகள் தற்காலிகமாக மின்விநியோகம் செய்யப்பட்டிருந்தது. இதற்காக 43,9152.34 ரூபாய் மின்சார ஜெனரேட்டர்களை நிறுவுதல் மற்றும் ட்ரான்ஸ்போர்மர்ஸ்க்காக 2243114.23 ரூபாவும் செலவிடப்பட்டது.
இந்த உபகரணங்கள் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் திகதி வரை வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை இந்த உபகரணங்களுக்கு எரிபொருளும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மனுதாரர்கள் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு அனுமதித்து, அவர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டதாக அறிவித்து, மின்சார சபை நடவடிக்கை எடுக்கவும் இந்த சம்பவங்கள் குறித்த தணிக்கை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் மின்சார சபைக்கு உத்தரவிட வேண்டும்.
அதிகார துஷ்பிரயோகத்தை மேற்கொண்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் ” என தனது மனுவில் கோரியுள்ளார்.