காஸாவில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துக: அரபு லீக் உட்பட முஸ்லிம் நாடுகள் கோரிக்கை

Date:

ஆக்கிரமிப்பு இஸ்ரேல் மீது பலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தின் கஸ்ஸாம் படையினர் அதிரடியாக மேற்கொண்ட தூபான் அல் கஸ்ஸாம் தாக்குதலை வீரச் செயலாக வர்ணித்துள்ள ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனியா, மஸ்ஜிதுல் அக்ஸா மீதான தாக்குதல்களுக்கும் பலஸ்தீன குடிமக்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களாலும் குடியேற்றக்காரர்களாலும் மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகளுக்குமான பதிலடி இது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்பு மற்றும் குடியேற்றப் படைகளின் பயங்கரவாதத்துக்கு எதிராக தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை பலஸ்தீனர்களுக்கு உண்டு என பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

காஸா மீதான இராணுவ நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு கோரியுள்ள அரபு லீக் தலைவர் அஹமட் அப்துல் கைஸ், இரு தரப்பும் மாறி மாறி மோதல்களில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைபிடிக்குமாறும் பொதுமக்கள் மேலும் ஆபத்துக்குள்ளாவதைத் தவிர்க்குமாறும் எகிப்து வெளிநாட்டமைச்சர் ஸாமிஹ் சுக்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பலஸ்தீன மக்களுக்கெதிரான இஸ்ரேலிய வன்முறைகளுக்கும் தாக்குதல்களுக்கும் சாட்சியாக மேற்குக் கரையிலுள்ள நகரங்களும் பிரதேசங்களும் மாறியிருக்கும் நிலையில் தற்போது நிலைமாற்றம் நிகழ்ந்துள்ளது என ஜோர்தான் வெளியுறவு அமைச்சர் ஐமன் சபாதி தெரிவுத்துள்ளார்.

எகிப்தும் ஜோர்தானும் இஸ்ரேலுடன் சமாதான உடன்படிக்கை செய்வதில் முந்திக் கொண்ட நாடுகளாகும்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளுக்கும் பலஸ்தீனின் பல பிரிவுகளுக்கும் இடையில் வன்முறைகளுக்கு வழிவகுக்கும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருவதை நாம் அவதானித்து வருகிறோம் என இஸ்ரேலுடன் சுமுகமான உறவை நாடி வரும் சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

2020 முதல் இஸ்ரேலுடன் சுமுக உறவைப் பேணி வருகின்ற ஐக்கிய அரபு அமீரகம், உச்சபட்ச கட்டுப்பாட்டைப் பேண வேண்டும் எனவும் விளைவுகள் கடுமையாவதைத் தணிக்கும் வகையில் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

ஆக்ரோஷமான செயற்பாடுகளில் இருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நாம் இரு தரப்பையும் கேட்டுக் கொள்கிறோம் என துருக்கிய ஜனாதிபதி அர்தூகான் கருத்து வெளியிட்டுள்ளார்.

பலஸ்தீனப் போராளிகளைப் பாராட்டுகிறேன் எனத் தெரிவித்த ஈரானின் ஆன்மீகத் தலைவர் அலி ஹுஸைன் கொமைனியின் ஆலோசகர் ரஹீம் ஸபாவி, பலஸ்தீனும் ஜெரூஸலமும் விடுவிக்கப்படும் வரை நாம் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம் எனவும் தெரிவித்தார்.

ஈரானின் வெளியுறவு அமைச்சர் நாஸர் கன்ஆனி, இந்த யுத்தத்தில் ஆச்சரியப்படத்தக்க வகையில் பாவிக்கப்பட்டிருக்கும் உத்திகளும் நுட்பங்களும் பலஸ்தீன மக்கள் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்கொள்வதில் நம்பிக்கையுடன் இருப்பதைக் காட்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் நடவடிக்கையை அப்பட்டமான தாக்குதல் என வர்ணித்துள்ள குவைத் வெளிநாட்டமைச்சர், குடியேற்றங்களை விரிவுபடுத்தும் கொள்கை மற்றும் ஆக்கிரமிப்பு மூலம் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என சர்வதேச சமூகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

பலஸ்தீன விவகாரங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடு ஒரு போதும் மாறப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள கத்தாரின் வெளியுறவு அமைச்சர் ஹமாஸின் நடவடிக்கைகளுக்கான முழுப் பொறுப்பையும் இஸ்ரேலே ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...