கடந்த 6ஆம் திகதி மாத்தறை மாவட்ட உதவிசெயலாளர், திருமதி லக்மாலி தேனுவர தலைமையில் மாத்தறை தல்பாவில மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்கள் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டனர்.
இவர்களை புத்தளம் மாவட்ட சர்வமத குழுவின் உறுப்பினர்களும் சர்வ மதத் தலைவர்களும் பெரிய பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்களும் வரவேற்றனர்.
அத்துடன் அவர்களுக்கான காலை உணவும் பரிமாறப்பட்டது.
இவ்விஜயத்தின் போது பள்ளிவாசலுடைய வரலாற்றுப் பின்னணி, பள்ளிவாசலில் இடம்பெறுகின்ற வணக்க வழிபாடுகள், இஸ்லாம் பற்றிய சுருக்கமான அறிமுகம், புத்தளம் மக்களுடைய பாராம்பரியங்கள் தொடர்பாக பல்வேறு விடயங்கள் மாணவர்களுக்கும் அரச உயர் அதிகாரிகளுக்கும் விளக்கிக் கூறப்பட்டது.
இச் சிறப்பான நிகழ்வில் மாத்தறை மாவட்ட உதவிச்செயலாளர் அவர்களுக்கும் மாத்தறை மாவட்ட செயலக கணக்காய்வாளர் திருமதி பி.எஸ்.ஏ.குமாரி, அவர்களுக்கும் சர்வமதத் தலைவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து புனித அல்-குர்ஆனின் சிங்கள மொழி பெயர்ப்புப் பிரதிகளும் ” சந்த தெகட சந்த ” நபிகளாரின் வாழ்க்கை சரிதம் பற்றிய நூல் பிரதிகளும் பிரமுகர்களுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் மாத்தறை உதவி மாவட்ட செயலாளர் திருமதி லக்மாலி தேனுவர, அவர்களும் சர்வமதத் தலைவர்களான ,கனேகொட ரத்மல் கெட்டியே சிறிதம்ம ஹிமி,புத்தியாகம சந்திரரத்ன ஹிமி, அருட் தந்தை யோஹான் ஜெயராஜ், சுந்தர ராம குருக்கள் அவர்களும் ஆசிர்வாத உரைகள் வழங்கியதோடு புத்தளம் சர்வமதக்குழு செயற் குழு உறுப்பினர் ருமைஸ் அவர்கள் நன்றியுரை வழங்கினார். திரு.ஹிஷாம் ஹுஸைன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
நீதி அமைச்சின் தேசிய நல்லிணக்கத்துக்கான பிரிவும் மாத்தறை மாவட்ட சர்வமத அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த இந் நிகழ்ச்சி யாழ்ப்பாணம் வரை சென்று தமிழ், சிங்கள, கிறிஸ்தவ சமயங்களின் கலாசாரங்களை பாராம்பரியங்களை நேரடியாக அறிந்துகொண்டு அப்பகுதி மக்களுடைக்கிடையே நல்லுறவை வலுப்படுத்துவது இந்நிகழ்த்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கிய பலரும் இத்தகைய சந்திப்புகளின் தேவைகள், நன்மைகள் பற்றியும் உணர்வுபூர்வமாக கருத்துக்களை வழங்கினர்.
அங்கு பாடசாலை மாணவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
“எங்கள் வாழ்நாளில் முஸ்லிம்களுடைய பள்ளிவாசலுக்கு நுழைவது இதுவே முதற்தடவையாகும்.
அங்கு நடைபெறுகின்ற பணிகள், கடமைகளை புரிந்து கொள்ள வாய்ப்பு வழங்கியமைக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறான சந்தர்ப்பங்கள் தென்பகுதியை சேர்ந்த என்னைப் போன்ற நிறைய மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.
நான்கு மதங்களையும் சேர்ந்த மக்கள் வாழ்கின்ற நாட்டில் மக்களுக்கு மத்தியில் நல்லெண்ணத்தையும் புரிந்துணவர்வையும் ஏற்படுத்தி இந் நாட்டை ஒளிமயமான எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல இவ்வாறான ஒன்று கூடலும் சந்திப்புக்ளும் தொடராக இடம் பெறுவது காலத்தின் தேவையாகும்.
நீதி அமைச்சின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகமும் மாத்தறை மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த வடக்கு-தெற்கு நட்புறவு பாலம் திட்டத்தின் கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சியான ‘சன்ஹிந்த அபிமுவ’ நிகழ்ச்சியின் கீழ் மாத்தறை – தல்பாவில மத்திய மகா வித்தியாலய மாணவர்களே சிறப்பு வாய்ந்த இச் சுற்றுலாவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.