பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தைகளை மேற்பார்வையிடுவதற்கு ஒரு சுயாதீன அமைப்பை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு சுயாதீனமான அமைப்பொன்றை நிறுவ வேண்டியதன் அவசியத்தை உலகின் பல நாடுகள் அங்கீகரித்துள்ளதாகவும், அதேபோன்ற அதிகார சபையை நிறுவ வேண்டியதன் அவசியத்தை இலங்கையும் தெரிவித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் இது தொடர்பான கூட்டுப் பிரேரணையை கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்துள்ளனர்.
இதன்படி, எம்.பி.க்களுக்கான நடத்தை விதிகளை அமைப்பது மற்றும் மேற்பார்வை குழுவை நியமிப்பது தொடர்பான அடிப்படை வரைவு சட்டமூலம் தொடர்பில் சபாநாயகர் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துக்களைப் பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சபாநாயகர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைக் கருத்திற் கொண்டு சட்ட வரைவைத் தயாரிக்குமாறு சட்ட வரைவு தலைவருக்கு அறிவுறுத்தவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தைகளை மேற்பார்வையிடுவதற்கு சுயாதீன சபையொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.