இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜமின் நெடன்யாஹுவைத் தொடர்பு கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஹமாஸின் தாக்குதலைக் கண்டித்ததோடு அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் எனவும் தெரிவித்தார்.
தன்னையும் தனது மக்களையும் பாதுகாக்க இஸ்ரேலுக்கு உரிமை உண்டு எனவும் தேவையான அனைத்து ஆதரவையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஏற்கனவே அமெரிக்கா இஸ்ரேலுக்கு பல பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை வழங்கியுள்ளது.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இஸரேல் மீது நடத்தப்பட்ட இந்தக் கொடூரத் தாக்குதல் அதிர்ச்சியளிப்பதாகவும், இந்தக் கடினமான நேரங்களில் இந்தியா இஸ்ரேலுக்குத் துணை நிற்கும் எனவும் அவர் தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு ஐ.நா. சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், ‘இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் போராளிகளின் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
மேலும் வன்முறைகளை தவிர்த்து அமைதிக்கான வழியை தேடுமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், இந்தத் தாக்குதல் இஸ்ரேலியப் பொதுமக்கள் மீது மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சிவிலியன்களை இலக்காக்கி தாக்குதல் மேற்கொள்ளக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
தாக்குதலைக் கண்டிப்பதாகவும் நிலைமை தீவிரமடைவதைத் தவிர்க்குமாறும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையை தலைமை தாங்கும் பிரேஸில் தெரிவித்துள்ளது.
இதேபோல ஐரோப்பிய ஆணைக்குழு, பெல்ஜியம், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெய்ன் போன்ற நாடுகள் இஸ்ரேல் மீதான தாக்குதலைக் கண்டிப்பதாகவும் இஸ்ரேலுக்கு தன்னைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமை உண்டு என்றும் தாம் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.