ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29 ஆம் திகதி துருக்கி குடியரசு தினம் கொண்டாடப்படும். இந்த ஆண்டு விசேடம் என்னவெனில் துருக்கி குடியரசு நிறுவப்பட்டு 100 ஆண்டுகள் பூர்த்தி ஆவதாகும்.
இந்த 100 ஆண்டு காலத்தில் துருக்கியின் சாதனைகள் மற்றும் அதன் இலக்குகளை பாரப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அக்டோபர் 29, 1923 இல் துருக்கி அதிகாரப்பூர்வமாக குடியரசாக அறிவிக்கப்பட்டது.
பின்னர், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு திரு. அட்டதுர்க் ஏகமனதாக துருக்கி குடியரசின் முதல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அன்று முதல் ஒவ்வொரு அக்டோபர் 29 ஆம் திகதி குடியரசு தினம் கொண்டாடப்படுகின்றது. இவ்வாண்டு கொண்டாட்டங்கள் குடியரசின் வளர்ச்சியின் அஸ்திவாரங்களை ஆராய்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகம் பலம் பெற்றமை
கடந்த காலங்களில் இராணுவ சதிப்புரட்சிகள் முதல் அரசியல் கட்சிகளை தடை செய்வது மற்றும் பாராளுமன்ற பிரதிநிதித்துவப் பிரச்சினைகள் வரை பல தடைகளை எதிர்கொண்டு வந்த துருக்கி, ஜனநாயகத்தை ஸ்திரப்படுத்தியமை அதன் சாதனைகளில் முதன்மையானது.
1950 இல் பல கட்சி முறைக்கு மாறியதைத் தொடர்ந்து ஊழல்களின்றி ஜனநாயக முறையில் தேர்தல்களை நடத்துவதில் துருக்கி வெற்றி கண்டுள்ளது.
இவ்வாண்டு மார்ச் மாதத்தில் துருக்கியில் நடைபெற்ற தேர்தல்களின் போது போட்டியிட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்திருந்ததுடன் இங்கு ஜனநாயகம் வலுவுற்றமைக்கான ஒரு நல்ல சான்றாகும்.
பெண்கள், இளம் வயதினரின் அரசியல் பிரநிதித்துவம்
1934 ஆம் ஆண்டில் பெண்களுக்கு முழு அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டதன் பின் படிப்படியாக அவர்களுடைய அரசியல் ஈடுபாடு அதிகரித்து மே 2023 தேர்தல்களில் பாராளுமன்றத்தில் அவர்களின் பிரதிநிதித்துவம் 121 உறுப்பினர்களாக உயர்ந்தது.
அத்துடன் தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 2017 ஆண்டில் 18 ஆக குறைக்கப்பட்டதன் விளைவாக இளம் வேட்பாளர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதும் அதிகரித்துள்ளது.
மேலும், வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முதல் சுற்றில் வாக்காளர் சனத்தொகைகளில் 87.05 வீதமானோர் வாக்களித்ததுடன், இரண்டாவது சுற்றில் வாக்களித்தோர் வீதம் 84.15 என பதிவாகியது.
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு மக்கள் வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்ற முறை ஜனாதிபதி மாதிரிக்கு மாற்றப்பட்டதுடன், 2021 ஆம் ஆண்டில் சிறிய கட்சிகளுக்கு தொகுதிகள் அல்லது கூட்டணிகளை அமைக்க இடமளிக்கும் தேர்தல் கூட்டணி சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இது பங்கேற்பதற்கான 7% வரம்பைக் கடக்க கட்சிகளுக்கு உதவியது. அதற்காக முதலில் இருந்த எல்லை 10% ஆகும். இவற்றுடன், அரசியல் துறையில் பன்முகத்தன்மைக்கு துருக்கி வழிவகுத்தது.
கைத்தொழில்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி
மேற்படி அரசியல் ரீதியில் நிலையான அஸ்திவாரத்தை இட்ட துருக்கி குடியரசு வாகன உற்பத்தி, பாதுகாப்பு மற்றும் எரிசக்தி துறைகளிலும் பல தொழில்நுட்ப முன்னேற்றங்களை அடைந்து வருகின்றது.
துருக்கிய தேசத்தின் பிறரை சாரா போக்கை இவை வலுப்படுத்தியதுடன் புதுமைகள் பலவற்றை அறிமுகம் செய்த வண்ணம் சர்வதேச அரங்கில் பல வெற்றிகளுக்கு வழிவகுத்தபடி உள்நாட்டு தொழில்களின் வளர்ச்சியையும் உறுதிபடுத்தியது.
இதன் ஒரு படித்தரமாக 2019 ஆண்டில் முதலாவது மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தை துருக்கி அறிமுகப்படுத்தியதுடன் இது தேசத்தின் உயர் தொழில்நுட்பத்திற்காக ஒரு சிறந்த சான்றாகும்.
இவைகளுடன், ஆளில்லா வானூர்திகள் (UCAV) மற்றும் ஆளில்லா தாக்கு வானூர்திகள் (UCAV) உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதன் மூலம் உயர் தொழில்நுட்ப பயங்கரவாத எதிர்ப்பு கருவிகளை உற்பத்தி செய்வதிலும் துருக்கி சுதந்திரமான விதத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
இதுவானது கொந்தளிப்பான பிராந்தியத்தில் அமைந்துள்ள துருக்கியின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.
துருக்கியின் பாதுகாப்பு உற்பத்திகளில் ட்ரோன்கள், ஹெலிகொப்டர்கள், யுத்த டாங்கிகள், தாக்கும் விமானங்கள், ட்ரோன் தாங்கிக் கப்பல்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் ஆகியவையும் உட்படும்.
இவ்வதி நவீன பாதுகாப்பு உற்பத்திகளை இம்முறை குடியரசு தினத்தில் அரசு பொது மக்களுக்காக காட்சிப்படுத்தியது.
இவ்வைனத்து முன்னேற்றங்கள் காரணமாக, கடந்த இரு தசாப்த காலத்திற்குள் பாதுகாப்பு உற்பத்திகளுக்காக பிற நாடுகளை துருக்கி சார்ந்திருத்தல் வீதம் 80 இல் இருந்து 20 ஆக குறைந்துள்ளது.
விண்வெளி ஆய்வு
இவை தவிர, 2018 ஆம் ஆண்டில் துருக்கிய விண்வெளி அமைப்பு நிறுவப்பட்டு 2019 இல் தனது சொந்த தேசிய விண்வெளித் திட்டத்தை அறிமுகப்படுத்தியதுடன் அதன் முதல் தேசிய உயர் தெளிவுத்திறன் கொண்ட புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான IMECE விண்வெளிக்கு செலுத்தியது. மேலதிக ஆராய்ச்சிகளை அவ்வமைப்பு தொடரந்து முன்னெடுத்து வருகின்றது.
எரிசக்தி பாதுகாப்பு
மூலோபாய ரீதியாக எரிசக்தித் தேவையில் பிற நாடுகளை சாரந்திருக்காமை இலக்கின் ஒரு முன்னெடுப்பாக, கருங்கடலில் எரிசக்தி ஆய்வு மற்றும் தேடல் நடவடிக்கைகளை துருக்கி விரிவாக்கி அதன் பயனாக முதல் முறையாக துருக்கிய கருங்கடல் பரப்பில் இருந்து பெறப்பட்ட இயற்கை எரிவாயுவை தனது தேசிய எரிசக்தி கட்டமைப்பிற்கு செலுத்தியது.
இது தவிர, தனது எரிசக்தி ஆற்றல் வளங்களை பல்வகைப்படுத்தும் நோக்குடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலும் துருக்கி முதலீடு செய்துள்ளதுடன், மெர்சினில் நகரில் ஒரு அணுமின் நிலையத்தையும் கட்டத் தொடங்கியுள்ளது.
அத்துடன் இவ்வாண்டு அக்டோபரில், துருக்கி 11,602 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்துள்ளது.
தூய்மையான எரிசக்தியில் தனது அனைத்து முயற்சிகள் மூலமும், துருக்கியின் மொத்த நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் இப்போது ஐரோப்பாவில் ஐந்தாவது இடத்திலும், உலகில் பன்னிரண்டாவது இடத்தில் உள்ளமை குறிப்பிட்டத்தகது.
விவசாயம்
உலகின் குறிப்பிடத்தக்க விவசாய உற்பத்தி நாடுகளில் ஒன்றான துருக்கி ஒரு குடியரசாக அதன் 100 ஆண்டுகால வரலாறு முழுவதும் உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்தின் பாதுகாப்பை தொடர்ந்து உறுதி செய்து வந்துள்ளது.
இத்துறையில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை தழுவிய துருக்கி, கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வதை எளிதாக்கும் கொள்கைகளையும் அறிமுகப்படுத்தியது. அதே நேரத்தில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் பல மாற்றங்களுக்குப் பிறகு, குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில், துருக்கி விவசாயத் துறையில் தற்போது உலகின் 10 பிரதான நாடுகளில் ஒன்றாகத் திகழ்கின்றது.
2002 ஆம் ஆண்டில் 24.48 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த துருக்கியின் விவசாய உற்பத்த 2022 ஆம் ஆண்டில் 56 பில்லியனாக உயர்ந்ததுடன் விவசாய உற்பத்திகளின் ஏற்றுமதி பெறுமதி 2022 ஆம் ஆண்டில் 34.2 பில்லியன் டாலர்களை எட்டியது.
ரயில் பாதைகள்
குடியரசின் 100 ஆண்டுகால வரலாறு முழுவதும், ரயில் பாதை வலையமைப்பில் அதிகளவு முதலீடு செய்ததுள்ளதுடன், 1950 ஆம் ஆண்டில் 7,671 கிமீ என்ற அளவில் இருந்த ரயில் பாதைகள் 2002 ஆம் ஆண்டில் 10,940 கிமீ ஆக விரிவடைந்தது அதன் பின் 2023 ஆம் ஆண்டில் 13,919 கிமீ நீளத்தை எட்டியது.
2002 ஆண்டிடட்குப் பிறகு, அதிவேகப் பாதைகள் மீதும் துருக்கி கவனம் செலுத்தி இதுவரை 2,251 கி.மீ அதிவேக பாதைகளை நிறுவியுள்ளது.
அத்துடன் டெவலப்மண்ட் ரோட் என்ற திட்டம் ஊடாக ரயில்பாதை, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் நகரங்கள் வழியாக துருக்கியை ஈராக்குடன் இணைப்பதற்கும் துருக்கி நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதற்கு சமாந்திரமாக ஈராக்கும் தனது ஒத்த திட்டம் ஒன்று ஊடாக துருக்கியுடன் இணைய 1,200-கிமீ ரயில் பாதை மற்றும் நெடுஞ்சாலைகளை நிறுவி வருகின்றது பாரசீக வளைகுடாவிலிருந்து ஐரோப்பா வரையிலான பரந்த புவியியல் பகுதிக்கு இந்த பிரம்மாண்டமாக போக்குவரத்து வழித்தடம் பயனளிக்கும்.
எரிபொருள் குழாய் வலையமைப்பு
இவை தவிர, மசகு எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருள் வளங்களை செலுத்தவும் பெறவும் பாரிய குழாய் வழி திட்டம் ஒன்றையும் துருக்கி முன்னெடுத்துள்ளது. இத்திட்டம் மூலம் அஸர்பைஜான் – துருக்கி மற்றும் ஐரோப்பா, ஜோர்ஜியா – துருக்கி, ரஷ்யா – துருக்கி, ஈராக் – துருக்கி என்ற விதத்தில் இக்குழாய் வழிகள் நிறுவப்படும்.
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை பலப்படுத்தும் அதே நேரத்தில் அண்டை நாடுகளுடன் எரிசக்தி ஆற்றல் ஒத்துழைப்பிற்கும் இத்திட்டம் பங்களிப்பு செய்வதோடு சர்வதேச சந்தைகளுக்கு எரிபொருட்களை தடையின்றி வழங்குவதையும் இத்திட்டம் உறுதி செய்யும்.