“இஸ்ரேல் – பலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டுவர அனைத்துலக நாடுகள் ஓரணியில் திரள வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இஸ்ரேல் – பலஸ்தீன போர் விவகாரம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் சபை ஒத்திவைப்புவேளை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
“எமது நாட்டில் 30 வருடகாலம் யுத்தம் இடம்பெற்றது. யுத்தம் மற்றும் யுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எமது மக்களுக்கு நன்கு அனுபவம் உள்ளது.
தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தால் பாரிய பாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளோம். எந்தவொரு நாட்டிலும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் இடம்பெறுமானாலும் அதற்கு நாம் கடும் எதிர்ப்பை வெளியிடுகிறோம்.
1967ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன எல்லைகள் தொடர்பில் ஐ.நாவில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன. ஆகவே, இருதரப்பினருக்கும் இடம்பெற்றுவரும் யுத்தத்தை நாம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
பாதிக்கப்படும் அப்பாவி மக்களை காப்பற்ற வேண்டிய பொறுப்பு அனைத்துலக சமூகத்திற்கு உள்ளது. பல உயிர்கள் இருதரப்பிலும் இழக்கப்பட்டுள்ளன. ஐ.நாவில் எல்லைகள் தொடர்பில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரம் இருதரப்பினரும் செயல்பட வேண்டும்.
பலஸ்தீனத்துடன் எனது தந்தை மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எமது குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. மஹிந்த ராஜபக்ஷதான் பலஸ்தீன-இலங்கை நட்புறவுச் சங்கத்தை உருவாக்கியிருந்தார். யுத்தம் காரணமாக பலஸ்தீன மக்களுக்கு சில அசாதாரணங்கள் இடம்பெறுகின்றன. அதனால், அவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
பலஸ்தீனத்தில் வீதியொன்றுக்கு மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. உலகில் எந்தவொரு நாட்டிலும் வேறு நாட்டின் தலைவரின் பெயரை வைப்பதில்லை. அந்த கௌரவத்தை பலஸ்தீனம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கியுள்ளது.
இவ்வாறான நெருக்கடியான நிலைமையின் போது எமது நாட்டு பொருளாதாரத்துக்கு ஏற்பட போகும் அபாயங்கள் குறித்தும் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும்“ என்றார்.