முல்லைத்தீவு நீதிபதி தொடர்பில் விசாரணை நடத்தும் அதிகாரம் அரசுக்கோ, ஜனாதிபதிக்கோ கிடையாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
எனவே, இந்த விடயம் தொடர்பான பொறுப்பை அரசின் கணக்கில் போடுவதற்கு முயற்சிக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி நாட்டைவிட்டு வெளியேறிய பின்னரே, அச்சுறுத்தல், மன அழுத்தம் தொடர்பில் அவர் எழுதிய கடிதம் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளது.
அவ்வாறு அழுத்தம், அச்சுறுத்தல் இருந்திருந்தால் நாட்டைவிட்டு வெளியேறிய பின்னர், கடிதம் அனுப்பி இருக்க வேண்டியதில்லை. அதற்கு முன்னர் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நீதிபதிக்கு இருக்கின்றது.
நீதிபதி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுமானால் அந்த அச்சுறுத்தலை விடுப்பது அரசாங்கமா, நாடாளுமன்ற உறுப்பினரா அல்லது தனி நபரா என்பது விடயமல்ல. ஏனெனில் அச்சுறுத்தல் விடுத்த நபருக்கு பிடியாணை பிறப்பித்து தேவையான நடவடிக்கையை எடுக்ககூடிய அதிகாரம் நீதவானுக்கு அரசமைப்பின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பிடியாணை பிறப்பிக்க முடியும், வழக்கு விசாரணை செய்து தண்டனை வழங்க முடியும், மேன்முறையீடு, உயர்நீதிமன்றத்துக்கு முன்னிலைப்படுத்த முடியும், இப்படி அவருக்கு அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தை அவர் பயன்படுத்தவில்லை எனில், அதற்கான பொறுப்பை அவர் ஏற்க வேண்டும்.
இது தொடர்பான பொறுப்பை அரசின் கணக்குக்கு போட முற்பட வேண்டாம். ஏனெனில் மாவட்ட நீதிபதிகள் நியமனம், ஒழுக்க நடவடிக்கை உட்பட அனைத்து விடயங்களையும் நீதிச்சேவை ஆணைக்குழுதான் முன்னெடுக்கின்றது.
அரசமைப்பின் பிரகாரம் உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழு அதுவும். நீதிபதி தொடர்பில் விசாரணை நடத்தும் அதிகாரம் அரசுக்கோ, ஜனாதிபதிக்கோ கிடையாது. நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு மட்டும்தான் அந்த அதிகாரம் உள்ளது.
பிரதம நீதியரசர் தலைமையிலான அந்த குழுவுக்கு எந்த விதத்திலும் அரசால் கட்டளைகளை பிறப்பிக்க முடியாது” எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.