பலஸ்தீன விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஓஐசி யின் அவசர மாநாடொன்று நேற்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஓஐசியின் நடப்புத் தலைமையான சவூதி அரேபியாவும் பாகிஸ்தானும் இணைந்து இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தன.
பலஸ்தீன மக்களுக்கெதிரான இஸ்ரேலின் இராணுவ ஆவேஷம் தொடர்பில் கலந்துரையாடவும், அமைப்பின் கொள்கைகளையும் நோக்கங்களையும் நினைவுபடுத்துவதற்காகவும், பலஸ்தீன் மற்றும் அல் அக்ஸா தொடர்பிலான அமைப்பின் தீர்மானங்களை உறுதிப்படுத்துவதற்காகவும் பலஸ்தீன விவகாரம் முழு முஸ்லிம் உம்மத்தினதும் விவகாரம் என்பதை அழுத்திச் சொல்வதற்காகவும் பலஸ்தீன மக்களின் சுயநிர்ணயம், பலஸ்தீன அகதிகளின் மீள் குடியேற்றம், சுதந்திரத்துக்கான அவர்களது உரிமை, 1967 ஜூன் 4 ஆம் திகதிய எல்லைகளுக்கு அமைவாக புனித குத்ஸை தலைநகராகக் கொண்டு சுதந்திரமானதும் இறையாண்மையுள்ளதுமான பலஸ்தீனத்தை நிறுவுதல், தங்களது உயிருக்கும் உடைமைகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ள இஸ்ரேலின் தாககுதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளல் போன்ற விவகாரங்களில் அவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்குமாக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதாக ஓஐசி அறிவித்துள்ளது.
அங்கத்துவ நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் காரசாரமாக உரையாற்றிய ஈரானிய வெளிநாட்டமைச்சர் ஹுஸைன் அமீரப்துல்லஹியான், ஓஐசி நாடுகள் இணைந்து இஸ்ரேலுக்கான எரிபொருளைத் தடை செய்ய வேண்டும் எனவும், அனைத்து ஓஐசி நாடுகளும் இஸ்ரேல் இராஜதந்திரிகளை தமது நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
On now: The extraordinary meeting of the OIC Executive Committee to address the bloody and continuing Israeli aggression against the Palestinian people in the #Gaza Strip. pic.twitter.com/uKYGkqYi3B
— OIC (@OIC_OCI) October 18, 2023
மாநாட்டில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.பலஸ்தீன மக்களுக்கு எதிரான காட்டு மிராண்டித் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என வேண்டிக் கொள்வதோடு இந்தத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறது.
2. இந்த மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை ஐநாவின் நிறுவனங்கள் ஊடாக விரைந்து வழங்குமாறு அனைத்து நாடுகளையும் கேட்டுக் கொள்கிறது. சிவிலியன்கள் தாக்கப்படுவதன் அபாயத்தையிட்டு அமைப்பு எச்சரிக்கை விடுக்கிறது.
3. அல் அஹ்லி வைத்தியசாலையில் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டிப்பதோடு இந்த ஈனச் செயலுக்கான முழுப் பொறுப்பையும் இஸ்ரேல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் இவ்வகையான தாக்குதல்களை நிறுத்துமாறு குரல் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது.
4. காஸாவில் சிவிலியன்கள் மீதான அனைத்து அடாவடித்தனங்களுக்கும், இழைக்கப்பட்டிருக்கும் போர்க் குற்றங்களுக்கும் இஸ்ரேல் பொறுப்புச் சொல்ல வேண்டும்
5. தார்மீகச் சட்டங்களுக்கும் சர்வதேச சட்டங்களுக்கும் இணங்கி சிவிலியன்களை இலக்கு வைக்காதிருக்குமாறும் அவர்களின் உயிர்களைப் பாதுகாப்பதில் முக்கியததுவம் வழங்குமாறும் அழுத்திச் சொல்கிறது.
6. பலவந்த வெளியேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதோடு பலஸ்தீன மக்கள் தமது நிலத்தில் நிலைத்திருப்பதற்கான தமது ஆதரவை உறுதிப்படுத்துகிறது. சர்வதேச சமூகமும் இந்த விடயத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறது.
7. தனது பொறுப்புக்களைச் செய்யத் தவறியமைக்காக நாம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையைக் கண்டிப்பதோடு எமது வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இது சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் நிராதபாணியான சிவிலியன்களின் பாதுகாப்பையும் எதிர்மறையாகப் பாதித்திருக்கிறது.
8. ஐக்கிய நாடுகள் சபையும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையும் தமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.
9. புனித அல் குத்ஸ் ஷரீபில் ஆயுதம் தாங்கியவர்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதை எச்சரிப்பதோடு அல் குத்ஸ், அல் அக்ஸா போன்ற புனிதப் பிரதேசங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் அழுத்திச் சொல்கிறது.
10. பலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலையையும் ஈனச் செயல்களையும் நிறுத்துவதில் பலஸ்தீன் பூரண ஆதரவை வழங்கும் என்பதை வலியுறுத்துகிறது.
11. பலஸ்தீன மக்களுக்கு எதிரான மிருகத்தனமான ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் மற்றும் இஸ்ரேலுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் சர்வதேச நிலைகளை கண்டிக்கிறது.
12. சர்வதேச சட்டங்களுக்கும் தீர்மானங்களுக்கும் பாரம்பரியங்களுக்கும் ஏற்ப இஸ்ரேலிய அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமலும், பலஸ்தீனர்களின் பிரிக்க முடியாத சுதந்திரத்துக்கான உரிமையை உறுதிப்படுத்தாமலும் பிராந்தியத்தில் அமைதி நிலவ முடியாது என்பதை மீளவும் வலியுறுத்துகிறது.
13. பலஸ்தீனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் உலக நாடுகள் தலையிட வேண்டும் என்றும் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப இரு நாட்டுத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறது.
14. ஓஐசியின் இந்தச் செய்திகளை அனைத்து நாடுகளுக்கும் எத்திவைக்குமாறு அனைத்து ஓஐசி நாடுகளையும் சர்வதேச அமைப்புக்களையும் கேட்டுக் கொள்கிறது.
15. ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற குற்றங்களை நிறுத்துவதற்கான இராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அங்கத்துவ நாடுகளைக் கேட்டுக் கொள்கிறது.
16. பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் வன்முறைகளைக் கலநதுரையாடுவதற்காக வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையிலான விஷேட கூட்டமொன்று அவசரமாகக் கூட்டப்பட வேண்டும்.
17. இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட வேண்டிய விடயங்களைப் பட்டியலிட்டுத் தருமாறு செயலாளரை வேண்டிக் கொள்ள வேண்டும்.
18. பலஸ்தீன மக்களுக்கு சர்வதேச அளவில் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.
19. பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் / ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் / மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் / ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஆகியோருடன் தொடர்பு கொள்ளவும், பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகளுடன் ஒருங்கிணைப்பைத் தொடர்வதற்கும் பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புக்களான அரப் லீக், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில், ஆப்பிரிக்க ஒன்றியம் மற்றும் அணிசேரா இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் இஸ்ரேலின் அனைத்து அத்துமீறல்கள், தாக்குதல்கள் மற்றும் குற்றங்களை நிறுத்துவதற்கும், பலஸ்தீன மக்களுக்கு சர்வதேச பாதுகாப்பை வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஒத்துழைப்புக் கோருவதற்கும் அமைப்பின் பொதுச் செயலாளர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
20. இந்தத் தீர்மானங்களின் தொடர்செயல் பற்றி அடுத்த விஷேட கூட்டத்தில் பொதுச் செயலாளர் முன்வைப்பார்.