பிரான்சில் கைது செய்யப்பட்ட இலங்கையின் பாதாள உலகக்குழு உறுப்பினரான ‘குடு அஞ்சு’ என அழைக்கப்படும் சின்ஹாரகே அமல் டி சில்வா, பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தெஹிவளை– கல்கிசை மாநகர சபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வாவின் கொலை, பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டதற்காக அவர் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில் நாட்டில் இருந்து தப்பிச்சென்ற ‘குடு அஞ்சு’ கடந்த ஏப்ரல் மாதம் பிரான்சில் கைது செய்யப்பட்டார்.
வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து போதைப்பொருள் கடத்தல் குழுவை நடத்தி வந்த குடு அஞ்சுவை கைது செய்ய சர்வதேச பொலிஸாரான இன்டர்போலும் சிவப்பு அறிவிப்பை அனுப்பியிருந்தது.
இதேவேளை குடு அஞ்சு எனப்படும் சின்ஹாரகே அமல் டி சில்வாவின் விடுதலையைக் கொண்டாடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் நான்கு பேரை கல்கிசை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த நால்வரையும் எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.