பலஸ்தீன் காசா நகரம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிராக தமிழ்நாடு மனிதநேய ஜனநாயகக் கட்சி முன்னெடுத்துள்ள பரப்புரை வாரத்தின் ஐந்தாம் நாளான நேற்று விவசாயிகள் பதாகை ஏந்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதன்போது, ‘போர் வேண்டாம் ‘ என்ற தலைப்பில் ‘பலஸ்தீனத்தில் குழந்தைகளை கொல்லும் இஸ்ரேலின் இனப்படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம்’ என்ற வாசகம் எழுதிய பதாகைகளை விவசாயிகள் ஏந்தியிருந்தனர்.
இதன்போது ஈழத்தமிழ் போராளி குழுக்களுக்கு யாசர் அராபாத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO) சார்பில் உதவிகள் மற்றும் ராணுவ பயிற்சிகள் கொடுக்கப்பட்டது குறித்தும், இன்று உலகம் எங்கும் வாழும் ஈழத்தமிழ் உணர்வாளர்கள் பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பரப்புரை செய்து வருவது பற்றியும் அப்போது மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நினைவு கூர்ந்தார்.
பலஸ்தீனம் காசா நகர் பேரழிவை சந்தித்த நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சி, நவம்பர் 17 முதல் 23 ஆம் திகதி வரை போர் எதிர்ப்பு பரப்புரை வாரத்தை அறிவித்திருந்தது.
தொடர்ந்து போர் எதிர்ப்பு பரப்புரை வாரத்தில் உணர்வாளர்கள் பலரும் பங்கேற்பர் என்று மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.
இதேவேளை, காசா பகுதிக்கு மருத்துவப்பொருட்கள், குடிநீர், மின்சாரம் போன்றவற்றை செல்லவிடாமல் தடுப்பதும் உயிரிழப்புகளை அதிகப்படுத்தி வருகிறது. சர்வதேசமெங்கும் இப்போர் குற்றங்களுக்கு எதிராக ஜனநாயக வழியிலான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது.
மதம், கலை, இலக்கியம், ஊடகம், சமூக சேவை, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்து ஆளுமைகள் பதாகை ஏந்தி தங்கள் உணர்வை வெளிப்படுத்துவார்கள் என்றும், அது ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வழியே பகிரப்படும் என்றும் மஜக குறிப்பிட்டுள்ளது.