ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட சிரேஷ்ட பாராளுமன்ற உத்தியோகத்தர் எம். ஜே.எம். நௌஷாத் (46) நேற்றுக் காலமானார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் தொலைபேசியில் இவரது தொலைபேசி இலக்கம் இருந்ததைக் காரணமாக வைத்தே இவர் கைது செய்யப்பட்டார்.
பாராளுமன்றத்தில் சிரேஷ்ட குறியீட்டு அதிகாரியாக (Senior Indexing Officer) கடமையாற்றிய இவர் கைது செய்யப்பட்டதுடன் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக திஸாநாயக்கவின் அனுமதியுடன் பாராளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு அவர் உபயோகப்படுத்திய அனைத்து உடமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவர் பயன்படுத்திய கணிணியின் வன்தட்டு (Hard disk) கூட பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் எடுத்துச் செல்லப்பட்டன.
அதிக எண்ணிக்கையிலான இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் தாக்குதலின் சூத்திரதாரியைக் கைது செய்து அழைத்துச் செல்வது போல இந்நிகழ்வு ஊடகங்களால் பெருப்பிக்கப்பட்டது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் குருநாகல் மாவட்ட நீதிமன்றம் இவர் உட்பட ஏழு பேரை குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பு வழங்கியதை அடுத்து சட்டமாஅதிபரினால் விடுதலை செய்யப்பட்டனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காலங்களில் இவர் எதிர்நோக்கிய அசம்பாவிதங்களினால் இவர் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டு குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று உயிரிழந்துள்ளார்.
இவரது இறுதிக் கிரியைகள் இன்று மதியம் பெருந்திரளானோர் பங்கேற்பில் அக்குறணையில் நடைபெற்றது.