பலஸ்தீனத்தில் சட்டவிரோதமான முறையில் ஒரு குடியேற்ற நாடாக ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல், கடந்த சுமார் ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக அங்கு இனஒழிப்பு மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் நவம்பர் மாதம் 15ம் திகதி புதன்கிழமை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை முதல் தடவையாக இது சம்பந்தமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
இந்தத் தீர்மானத்தில் கூட இஸ்ரேல் காஸாவில் மேற்கொண்டு வரும் இனஒழிப்பு மற்றும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையோ அல்லது அவற்றைக் கண்டிக்கும் வாசகங்களோ முன்வைக்கப்படவில்லை மாறாக “அவசர மற்றும் விரிவு படுத்தப்பட்ட ஒரு மனிதாபிமான நிறுத்தலை” மேற்கொள்ளுமாறு தான் கேட்கப்பட்டது.
மிகவும் மெல்லிய சொற்களால் அலங்கரிக்கப்பட்ட இந்தத் தீர்மானத்தில் ‘கோருகின்றோம்’ என்ற சொல்லுக்கு பதிலாக ‘அழைப்பு விடுக்கின்றோம்’ என்ற தொனியிலான சொற்பிரயோகம் தான் பாவிக்கப்பட்டிருந்தது.
மனிதாபிமான நிறுத்தலுக்கான அழைப்பை விடுக்கின்றோம் என்று தான் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்புச் சபையில் 12 க்கு பூச்சியம் என்ற நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
ஆனால் ஏற்கனவே எதிர்ப்பார்க்கப்பட்ட படி இஸ்ரேல் மால்டா நாட்டின் ஆதரவுடன் இந்தத் தீர்மானத்தை நிராகரித்தது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் அக்டோபர் 7ல் நடத்திய தாக்குதல் பற்றியோ அதில் 1200 பேர் கொல்லப்பட்டமை 240 பேர் பணயக் கைதியாக பிடிக்கப்பட்டமை அதன் பிறகு காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட கணமூடித்தனமான வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்கள், அவற்றில் இதுவரை 11 ஆயிரத்துக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை, அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்களும் சிறுவர்களும், காஸாவில் உள்ள கட்டிடங்களில் முக்கால் வாசிக்கும் அதிகமானவை தரை மட்டமாக்கப்பட்டுள்ளமை, அவற்றில் வாழ்ந்த 16லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளமை என எதுவுமே அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை.
1948க்கு முன் உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருக்கவில்லை என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே. அமெரிககா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஆதிக்க சக்திகளுடன் இணைந்து ரஷ்யாவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக பலஸ்தீனத்தை பிளவுபடுத்தி இஸ்ரேலை உருவாக்கும் தீர்மானம் ஐநாவில் நிறைவேறியது.
பின்னர் உலகம் முழுவதும் நாடோடிகளாக வாழ்ந்து கொடிருந்த யூதர்கள் கொண்டு வந்து குடியேற்றப்பட்டனர். இந்த குடியேற்றத்துக்காக காலாகாலமாக பலஸ்தீன பூமியில் வாழ்ந்து வந்த மக்கள் தமது சொந்த வீடுகளில் இருந்து விரட்டப்பட்டனர்.
படுகொலைகள், இனஒழிப்பு நடவடிக்கைகள், அச்சுறுத்தல்கள் என்பனவற்றின் மூலம் பலஸ்தீன மக்களின் காணிகளும் சொத்துக்களும் அபகரிக்கப்பட்டன.
வன்முறைகளைக் கையாண்ட யூதக் குடியேற்றவாசிகளுக்கு பலஸ்தீனர்களின் காணிகள் வழங்கப்பட்டமை சட்ட விரோதமானதாகும்.
ஆனால் சியோனிஸ வாதிகள் தமக்கு சார்பாக ஐக்கிய நாடுகள் சபையில் 1948 மே மாதம் கொண்டு வரப்பட்ட 181வது இலக்க தீர்மானத்தை நிறைவேற்றிக் கொள்ள உலக நாடுகள் பலவற்றை அச்சுறுத்தி இலஞ்சமும் வழங்கி அந்த தீர்மானத்தை நிறைவேற்றிக் கொண்டனர்.
இவ்வாறு தான் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது உலகில் நீதி மரணித்து, ஐக்கிய நாடுகள் சபை சிதைவடைந்து தீமையின் அச்சு நிiநிறுத்தப்பட்டது அன்றைய தினம் தான்.
அன்று முதல் இஸ்ரேல மத்திய கிழக்கை ஒரு கொலைகளமாக மாற்றத் தொடங்கியது. அடுத்தடுத்து யுத்தங்கள், அழிவுகள், படுகொலைகள் என இது தொடர்ந்தது. இன்றும் தொடருகின்றது.
இஸ்ரேல் இதுவரை பல யுத்தக் குற்றங்களைப் புரிந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையும் அதன் இன்னும் பல குழுக்களும் கண்டறிந்துள்ளன.
ஆனால் ஈராக், ஈரான் லிபியா ஆகிய நாடுகளின் விடயங்களில் நடந்து கொண்டதைப் போல் இஸ்ரேல் மீது இதவரை எந்தவிதமான தடைகளோ அல்லது வேறு நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை.
அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் முழுமையான ஆதரவுடன் இஸ்ரேல் தனது யுத்தக் குற்றங்களை கடந்து சென்று கொண்டே இருக்கின்றது.
காஸாவில் தரைமட்டமாக்கப்பட்ட கட்டிடங்கள்
இஸ்ரேலுக்கான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆதரவுகள் மற்றும் அனுசரணைகள் இன்று வரை தொடர்ந்த வண்ணமே உள்ளன.
மத்திய கிழக்கை ஒரு கொந்தளிப்பு மிக்க பிராந்தியமாக வைத்திருக்க வேண்டும் என்ற தமது நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக் கொள்ள அமெரிக்காவும் ஐரோப்பாவும் இந்த ஆதரவை தொடர்ந்து வழங்கி வருகின்றன.
இந்த வரிசையில் தான் தற்போது நடந்து கொண்டிருக்கும் காஸா யுத்தமும் வருகின்றது.
இன்றும் கூட இஸ்ரேல் தனது பிரதான எதிரிகளான ஹமாஸ் இயக்க போராளிகளை எதிர்த்து யுத்தம் செய்வதற்கு பதிலாக முற்றிலும் கோலைத்தனமான விதத்தில் நிராயுதபாணிகளான அப்பாவி மக்களையும், சிறுவர்களையும், பள்ளி மாணவர்களையும், பெண்களையும் குழந்தைகளையும், முதியவர்களையும் கொன்று குவித்து அவர்களின் வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் தரைமட்டமாக்கி வருகின்றது.
தற்போது காஸாவில் இடம்பெறுவது தெட்டத்தெளிவான இனஒழிப்பு மற்றும் இன சுத்திகரிப்பு நடவடிக்கையாகும். அகண்ட இஸ்ரேல் ராஜ்ஜியத் திட்டத்தின் கீழ் காஸாவையும் கொண்டு வந்து முழு மத்திய கிழக்கையும் அதன் பிடிக்குள் வைத்திருப்பது தான் இன்றைய யுத்தத்தின் பிரதான நோக்கம்.
ஐக்கிய நாடுகள சபையில் இதுவரை இஸ்ரேலைக் கணடித்து 125க்கும் அதிகமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையால் மிக அதிகமான கண்டனத்துக்கு உள்ளான நாடாக இஸ்ரேல் காணப்படுகின்றது. மத்திய கிழக்கு பிராந்தியத்தை முழுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் மூல காரணியாகவும் இஸ்ரேல் தான் காணப்படுகின்றது.
பலஸ்தீன மக்களுக்கு உணவு, தண்ணீர், மருந்துகள், மருத்துவ வசதிகள், மின்சாரம் என்பன உட்பட எல்லா அத்தியாவசிய பொருள்களும் வசதிகளும் மறுக்கப்பட்டு அவர்கள் மீது இனஒழிப்பு தாக்குதல்கள் தொடருவதால் அந்த மக்களின் நிலைமைகள் மிகவும் மோசமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமது வீடுகளை இழந்து, வாழ வசதிகளின்றி தவிக்கும் மக்கள் மீதான இத்தகைய கொடூரங்கள் அவர்களின் நிலைமைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு மோசமாக்கி உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது வாழ்விடங்களில் இருந்து வெளியேறும் மக்கள் கூட்டம்
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உரையாற்றிய உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரொஸ் அத்ஹனொம் தற்போதைய நெருக்கடியானது ஐக்கிய நாடுகள் சபைக்கும் அதன் உறுப்புரிமை நாடுகளுக்கும் ஒரு முக்கியமான சோதனையாகும் என்று கூறினார்.
உடனடி யுத்த நிறுத்தம் அமுல் செய்யப்பட வேண்டும் என்றும் தடங்களற்ற மனிதாபிமான உதவிகளுக்கான வழிகள் உடனடியாக திறக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். “நாம் வாழும் இந்த உலகத்தில் சமாதானத்தை மலரச் செய்யும் நோக்கத்தில் தான் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
அந்த வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்தவர்கள் என்ற ரீதியில் உங்களால் இந்த இரத்தக் களறியை நிறுத்த முடியாவிட்டால், உங்களால் அதை நிறுத்த முடியாமல் போனால் நாங்கள் உங்களிடம் கேட்கவுள்ள கேள்வி ஒன்றே ஒன்று தான்.
“எதற்காக இந்த ஐக்கிய நாடுகள் சபை உள்ளது” என்பது தான் அந்தக் கேள்வி. தீர்மானங்களை நிறைவேற்றினால் மட்டும் போதாது.
நீங்கள் செயலில் இறங்க வேண்டும். அதுவும் இப்போதே தாமதமின்றி செயலில் இறங்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.
இன்றைய நிலையை வர்ணிக்க கூட முடியாது. ஆஸ்பத்திரிகளின் தாழ்வாரங்கள் உட்பட முற்றவெளிகள் கூட காயம் அடைந்தவர்களாலும், நோய் வாய்ப்பட்டவர்களாலும் நிரம்பி வழிகின்றன.
பிண அறைகள் சடலங்களால் நிரம்பி வழிகின்றன. மயக்க மருந்துகள் எதுவும் ஏற்றப்படாமல் பச்சையாகவே பல சத்திர சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இடம்பெயர்ந்த அயிரக்கணக்கான மக்கள் ஆஸ்பத்திரிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதுவரை கொல்லப்பட்ட சுமார் 10800 பேரில் 70 வீதத்துக்கும் அதிகமானவர்கள் பெண்களும், சிறுவர்களும். சராசரியாக காஸாவில் ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் ஒரு குழந்தை மரணிக்கின்றது. இதுவரை இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. வீதி ஓரங்களிலாவது தங்க இடம் கிடைக்காதா என அவர்களில் பலர் அலைந்து திரிகின்றனர்.
தூங்குவதற்கு பாதுகாப்பான இடங்களைத் தேடி அலைந்தே பலரின் இரவுகள் விடிகின்றன. பல இடங்களில் சனக் கூட்டம் அதிகரிப்பதால், அங்கு போதிய அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் வயிற்றோட்டம், வாந்திபேதி, மூச்சுத் திணறல் உட்பட இன்னும் பல தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரொஸ் அத்ஹனொம் அங்கத்துவ நாடுகளுக்கு விளக்கமளித்தார்.
ஐக்கிய நாடுகள் நிவாரணப் பணிகளுக்கான பிரதான அதிகாரி மார்டின் கிரிப்பித் உயிரிழப்புக்கள் அன்றாடம் அதிகரித்து வருவதாகக் கூறினார். “உயிரிழப்புக்கள் இப்போது 11 ஆயிரத்தை தாண்டிவிட்டன.
அதில் பெரும்பாலானவர்னள் பெண்களும் சிறுவர்களும். உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக் கூடும். காஸாவில் தொலைத்தொடர்பு வலையமைப்புக்கள் சீர்குலைந்துள்ளதால் சரியான தரவுகளைப் பெற்றுக் கொள்ளவும் முடியவில்லை. 41 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன அல்லது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இது காஸாவில் இருந்த வீடுகளில் 45 வீதமாகும். சன நெரிசல் மிக்க பகுதிகளில் மிகவும் சக்திவாயந்த வெடிபொருட்கள் பாவிக்கப்பட்டுள்ளன. இதனால் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் மற்றும் பாதிப்புக்கள் என்பனவற்றின் அளவும், விதமும் வித்தியாசமானவையாகவும் அமைந்துள்ளன” என்று மார்டின் கிரிப்பித் விளக்கினார்.
உலக நாடுகளின் தலைநகரங்கள் பலவற்றில் காஸா மக்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களும் தொடருகின்றன
ஐக்கிய நாடுகள் சபையை கொஞ்சம் கூட மதிக்காமல், சர்வதேச சட்டங்கள் மற்றும் மனித கௌரவங்கள் என்பனவற்றையும் பொருட்படுத்தாமல் அவற்றை எல்லாம் அவமதிக்கும் தனது மனப்பாங்கை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 72 மணிநேரம் முடிவதற்குள் இஸ்ரேல், காஸாவில் ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பாடசாலை மீது குண்டுத் தாக்குதல் நடத்தி ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுவர்களைக் கொன்று குவித்தது.
சமகாலத்தில் அல்ஷிபா ஆஸ்பத்திரியில் இருந்து வைத்தியர்களை துரத்தியடித்து பலவந்தமாக வெளியேற்றி நோயாளிகள் பலவந்தமாக மரணிக்கும் நிலையை உருவாக்கியது.
அமெரிக்க ஜனாதிபதி பைடன் நினைத்திருந்தால் சில வாரங்களுக்கு முன்பே இந்த அவலத்துக்கு முடிவு கட்டி இருக்கலாம்.
ஆனால் அப்பாவி பலஸ்தீனர்கள் மீதான தனது இனஒழிப்பு படுககொலைகளை தொடர அவர் அனுமதித்தார். வெள்ளை மாளிகையில் தன்னை பதவிக்கு அமர்த்திய சியோனிஸ சக்திகளை மகிழ்ச்சி படுத்தவே அவர் அவ்வாறு நடந்து கொண்டார்.
ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு இருக்கின்றது என்ற மந்திரத்தை தான் அமெரிக்க ஜனாதிபதி, பிரான்ஸ் ஜனாதிபதி, பிரிட்டிஷ் பிரதமர் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் வெட்கக் கேடான விதத்தில் தொடர்ந்தும் கூறி வருகின்றனர்.
இதைக் கூறிக் கொண்டுதான் இஸ்ரேலை தடுத்து நிறுத்தாமல் தொடர்ந்தும் அதன் யுத்தக் குற்றங்களில் இவர்களும் பங்காளிகளாக இருந்து வருகின்றனர்.
துரதிஷ்டவசமாக பலஸ்தீனைச் சுற்றி இந்த சக்திகளால் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ள அரபுலக மன்னர்களும் ஒட்டுமொத்தமாக அமெரிக்க ஐரோப்பிய சக்திகளிடம் விலை போனவர்களாகவே காணப்படுகின்றனர்.
அதனால் தான் அவர்கள் மனித குலத்துக்கு எதிரான இஸ்ரேலின் கொடுமைகளை கணடும் காணாமல் இருந்து வருகின்றனர்.
பலஸ்தீன மக்களை இவர்கள் பாதுகாப்பது ஒருபுறம் இருக்கட்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு போத்தல தண்ணீரையோ ஒருவேளை உணவையோ அல்லது மருந்தையோ கூட இவர்களால் வழங்க முடியவில்லை.
அரசியல் ரீதியாக அந்தளவுக்கு கையாளாகாத தலைவர்களாகவே இவர்கள் காணப்படுகின்றனர்.
இன்று யுத்தக் குற்றவாளியாக மாறியுள்ள இஸ்ரேலின் பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தன்யாஹு “அரபு தலைவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவெனில், நீங்கள் உங்கள் நலன்களைக் காப்பாற்றிக கொளள வேண்டுமானால், நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்…
அதுதான் அமைதியாக இருப்பது” என்று குறிப்பிட்டுள்ளார். இதுதான் இன்றைய அரபுலக தலைவர்களின் வெட்கக் கேடான நிலை.
இந்தக் கூற்றைக் கேட்ட பின்னரும் மானமும் ரோஷமும் சுய கௌரவமும் உள்ள எந்த ஒரு அரபுலக தலைவராவது இஸ்ரேலுடன தமது உறவுகளை பலப்படுத்திக் கொள்வது பற்றி மீண்டும் பேசுவார்களா??
இருந்தாலும் கூட இன்றைய நிலையிலும் உலகம் முழுவதிலும் சமாதானத்தை விரும்பும் முஸ்லிம், கிறிஸ்தவ, பௌத்த மற்றும் யூத மக்கள் மத்தியில் இன்னமும் நம்பிக்கை உள்ளது.
அதனால் தான் உலக நகரங்கள் பலவற்றில் இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி பலஸ்தீன மக்களுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவான கோஷங்களை மிக அரிதாகவே காண முடிகின்றது.
மேற்குலகில் யூத ஆதரவால் உருவாக்கப்பட்டு, அதே யூத ஆதரவால் கவிழ்த்தப்படும் ஒரு சில அரசியல்வாதிகள் மட்டுமே இஸ்ரேலுக்கு ஆதரவாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.