காஸாவில் நடைபெறும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்துமாறு கோரி தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் இன்று காலை இலங்கையிலுள்ள ஐநா அலுவலகத்தில் வேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளது.
இலங்கையின் அரச,தனியார் மற்றும் தோட்டத்துறைகளின் மிகப் பெரிய தொழிற்சங்கமான இந்த அமைப்பு, இலங்கை ஐநா அலுவலகத்தின் அதிகாரிகளிடம் இந்த வேண்டுகோளை சமர்ப்பித்தனர்.
கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான சிவிலியன்கள் கொல்லப்படும் மிருகத்தனமான இஸ்ரேல் – காஸா யுத்தத்தை நிறுத்துவதற்கு ஐநா தலையிட வேண்டும் என நாங்கள் கோருகிறோம்.
மத்திய கிழக்கில் இரத்தக்களரி பல நாட்களாக அதிகரித்து வருகிறது, ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் காசாவில் பலஸ்தீனியர்கள் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் வாழ்கின்றனர். அவர்களைக் காப்பாற்றவும் உணவு மற்றும் மருத்துவ உதவிகள் பலஸ்தீன மக்களைச் சென்றடையச் செய்யவும் உடனடி போர் நிறுத்தத்தின் அவசியத்தை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் (NTUC) வலியுறுத்துகிறது.
பலஸ்தீனத்தில் துரதிர்ஷ்டவசமான மற்றும் மனிதாபிமானமற்ற சூழ்நிலை ஏகாதிபத்திய மற்றும் சர்வதேச சமூகத்தால் உருவாக்கப்பட்டது.
பலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் என இரு தனி நாடுகளை அமைப்பதாக ஐக்கிய நாடுகள் சபை உறுதியளித்தது, ஆனால் அவற்றை நிறைவேற்றத் தவறிவிட்டது. இது நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பாதுகாக்கின்ற போர் வெறி பிடித்த சிறு கூட்டமொன்றைத் தவிர 120 நாடுகளின் பெரும்பான்மை வாக்களிப்பின் மூலம் உடனடி யுத்த நிறுத்தத்துக்கான தீர்மானமொன்றை ஐநா வில் நிறைவேற்றியதை நாங்கள் மெச்சுகின்றோம்.
பலஸ்தீனில் நடைமுறைப்படுத்தப்படாத நியுயோர்க்கில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களால் எந்தப் புண்ணியமுமில்லை என்பதை நாங்கள் சொல்லித் தானாக வேண்டும்.
கடந்த 30 நாட்களாக ஐநா அடிப்படையிலான அமைப்பை வலுவிழக்கச் செய்து அழித்த ஏகாதிபத்தியத் திட்டத்தால், ஐநா தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்த வழியில்லாமல் வெறும் சத்தமாக மாறிவிட்டது என்பது மீண்டும் எடுத்துக் காட்டப்படுகிறது எனவும் கையளிக்கப்பட்ட வேண்டுகோளில் குறிப்பிடப்பட்டுள்ளது.