புத்தளம் ஏத்தாளையைச் சேர்ந்த ஜமாஅத்துல் முஸ்லிமீன் ஸ்தாபகத் தலைவர் அஷ்ஷேஹ் உமர் அலி (றியாதி) அவர்கள் காலமானார்கள்.
புத்தளம் ஏத்தாளையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஆரம்பக்கல்வியை அதே கிராமத்தில் கல்வி கற்றதுடன் அவரது சகோதரர்களுடன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், இவர் தனது 24 ஆவது வயதில் மார்க்கக் கல்வி கற்பதற்காக மூதூர் நத்வதுல் உலமாவில் கல்விபயின்றதுடன் அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் கல்வி கற்றார்.
மேலும் பாகிஸ்தானிலும், சவூதி ரியாதிலும் தனது உயல்கல்வியை கற்று முடித்த பின்னர் இலங்கையில் பறகஹதெனிய பகுதியில் இலங்கை தௌஹீத் ஜமாஅத்துடன் இணைந்து தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கல்லூரியில் விரிவுரையாளராக கடமைபுரிந்தார்.
அதேநேரத்தில் நதீர் மௌலவியுடன் இணைந்து ஜமாஅதுல் முஸ்லிமீன் எனும் இயக்கத்தை 1989 ஆண்டு ஏத்தாளையில் உருவாக்கினார்.
அல்லாஹ்வையும் அவனது தூதர் முஹம்மத் (ஸல் ) அவர்களையும் நம்பும் ஒவ்வொரு மனிதனும் தற்காலத்தில் காணப்படும் இயக்கங்கள் , தரீகாக்கள், மத்ஹபுகள் போன்றவற்றை கைவிடுவதோடு தாம் இருக்கும் தவறான கொள்கை கோட்பாடுகளை சரியானதும் , தெளிவானதுமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும், இதற்கு மாற்றமாக செயல்படுபவர்கள் மார்க்கத்துக்கு முரணானவர்கள் என்பதும் இவர்களின் கொள்கைகளும், கோட்பாடுகளுமாக இருந்தது.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் அஸர் தொழுகையின் பின்னர் ஏத்தாளையில் நடைபெற்றது.