நீதியாகவும் நியாயமாகவும் நடந்து கொள்வது இன்று உலகில் மிகவும் அரிதாக மாறிவிட்டது.
ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் அமைப்புகள், சர்வதேச நீதிமன்றம், உலக அமைதி போன்றவற்றைப் பற்றி நாம் பேசுகிறோம், ஆனால் அவற்றினால் துன்பப்படும் மக்களுக்கு எந்த நீதியும் கிட்டியதாகத் தெரியவில்லை.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் இடையிலான தற்போதைய மோதல் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
பாலஸ்தீனத்தில் நடந்து வரும் மனிதப் பேரவலம் தொடர்பாக நான் எந்த ஒரு சீரான கருத்தினையும் காணவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1948 இல் இஸ்ரேல் நாடு பிறந்தது.
யூதர்களுக்கு ஒரு அரசை உருவாக்குவது என்ற இந்த வேலையை பிரிட்டன் தான் செய்தது. பிரித்தானியப் பேரரசு தமது வாழ்க்கையை வளப்படுத்த உலகின் பல பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.
முக்கியமாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்திலிருந்து அவர்கள் செழிப்படைந்தனர்.
அவர்கள் இந்தியாவைக் கொள்ளையடித்தனர். பிரிட்டிஷ் படைகளுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்தனர், வங்காளத்தில் மில்லியன் கணக்கானவர்கள் பட்டினியால் இறந்தனர்.
அவர்களின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் சுரண்டலுக்கு எதிராக கிளர்ச்சி செய்த பலரை அவர்கள் கொன்று குவித்தனர். ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பிரிட்டன் இதனையே செய்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சுதந்திரம் என்ற பெயரில் அவர்கள் வெளியேறும் நேரம் வந்தபோது, அந்த நாடுகள் தங்களுக்குள் சண்டையிடுவதை உறுதிசெய்யும் வகையில் நாடுகளைப் பிரித்தனர்.
அவர்கள் முன்னேறுவதற்கு அவகாசம் வைக்கவில்லை. அவர்கள் நல்ல பரோபகாரிகளாக நடித்து, இந்த நாடுகளை நடத்த ஊழல்வாதிகளை நியமித்தனர்.
அவர்கள் மக்களின் செல்வத்தை கொள்ளையடித்து இங்கிலாந்தில் திறக்கப்பட்ட வெளிநாட்டு வங்கிகளை வளப்படுத்த ஏற்பாடு செய்தனர்.
பாலஸ்தீனத்தை யூதர்களிடம் ஒப்படைக்க பிரிட்டன் முடிவு செய்தது. அவர்களுக்கு ஒரு தேசம் தேவை என்று கூறியது. ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் குடியிருந்த மக்களுடன் கலந்தாலோசிக்காமல், பாலஸ்தீன மக்களுக்குச் சொந்தமான நிலத்தை பிரிட்டன் எப்படி ஒரு தட்டில் வைத்துக் கொடுக்க முடிவு செய்தது என்பது, மேற்கத்திய உலகம், குறிப்பாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், உலகை எப்படி ஆண்டது என்பதற்கும் எப்படி நீதி செலுத்துகிறது என்பதற்கும் பொதுவான அடையாளமாகும்.
ஒருவரிடமிருந்து நிலத்தைப் பறித்து மற்றவரிடம் ஒப்படைப்பது ஆங்கிலேயர்களின் பெருந்தன்மை. இந்தப் பெருந்தன்மை தான் மத்திய கிழக்கில் நடந்து வரும் இந்த இரத்தக்களரிக்கு ஒரே காரணம். பிரிட்டன் செய்தது ஒரு வரலாற்றுத் தவறு.
உலக அமைதிக்கே அச்சுறுத்தல். மக்களைப் பிளவுபடுத்திய ஒரு சோகம். பூர்வீக பாலஸ்தீன மக்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட எதையும், பிரிட்டன் ஒருபோதும் பொருட்படுத்தவில்லை.
93% மக்கள்தொகையைக் கொண்ட பாலஸ்தீனிய மக்களைக் கொன்று இடம்பெயர்த்து விட்டு யூதர்களை அகதிகள் என்ற பெயரில் குடியேற்றினர்.
வரலாற்றுத் தவறுகளுக்கு இந்த நவீன உலகில் எந்த அர்த்தமும் இல்லை. யூதர்கள் இது தங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம் என்று கூறுவார்களானால், ஏன் பூமியில் பண்டைய காலம் தொட்டு அவர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்ந்து வந்தார்கள் ?. 1948 இல் பாலஸ்தீனத்தில் யூதர்கள் 7% க்கும் குறைவாகவே இருந்தார்கள்.
ஜெர்மனியிலும் ஐரோப்பாவிலும் 70 லட்சம் பேர் கொல்லப்பட்ட, ஹிட்லரால் மனிதாபிமானமற்ற முறையில் தண்டிக்கப்பட்ட யூதர்கள் இயற்கையாகவே அனுதாபத்திற்கு தகுதியானவர்கள் தான்.
நான் இந்தப் படுகொலை பற்றிய ஆவணப்படங்களைப் பார்த்து பல தடவை அழுதிருக்கிறேன். ஒரு மனிதன் எப்படி இன்னொரு மனிதனுக்கு இப்படிப்பட்ட தீய செயலைச் செய்வான் என்று ஆச்சரியப்பட்டேன்.
ஆங்கிலேயர்களால் பாலஸ்தீனத்திற்கு அனுப்பப்பட்ட யூத குடியேற்றவாசிகள், சக மனிதர்களுக்கு எதிரான மனிதாபிமானமற்ற செயல்கள் என்ன என்பதை ஹிட்லரின் ஆட்சியை வைத்துப் புரிந்துகொண்டிருப்பார்கள் என்பது இயல்பான, தர்க்கரீதியான எதிர்பார்ப்பு.
இவற்றினூடாக மனித உரிமைகள், மனித விழுமியங்கள் மற்றும் மனித கண்ணியம் ஆகியவற்றில் யூதர்கள் உலகை வழிநடத்துவார்கள் என்று அப்போது பலரும் நம்பினர். ஆனால், துரதிர்ஷ்டவசமாகவும், அதிர்ச்சியூட்டும் வகையாகவும், அப்படி நடக்கவில்லை.
புலம்பெயர்ந்த யூதர்கள் குறுகிய காலத்திலேயே மத்திய கிழக்கில் மற்றொரு படுகொலையைத் தொடங்கினர்.
பாலஸ்தீன மக்கள் பணிவும் நட்பும் கொண்டவர்கள். 1948 க்கு முன் யூத மக்கள் பாலஸ்தீனியர்களுடன் மிகவும் நிம்மதியாக வாழ்ந்தனர்.
ஆனால் இடம்பெயர்வு தொடங்கியவுடன், குறுகிய காலத்திலேயே யூதர்கள் அந்த மண்ணின் மக்களை தாக்கி கொல்லத் தொடங்கினர்.
கணப்பொழுதில் அவர்கள் அகதி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் நிலங்களையும், கண்ணியத்தையும், வாழ்வதற்கான உரிமைகளையும் இழந்து மனித மிருகங்களாக நடத்தப்பட்டனர்.
இன்று சியோனிஸ்டுகள் பலஸ்தீனர்களை மனித விலங்குகள் என்று அழைப்பது நகைப்புக்குரியது. ஹிட்லரின் கீழ் இப்படிப்பட்ட கொடுமைகளை எதிர்கொண்ட ஒரு சமூகம், குறுகிய காலத்திலேயே நடந்த அனைத்தையும் மறந்துவிட்டு தாமே ஹிட்லராக மாறிவிட்டார்கள்.
புலம்பெயர்ந்த யூதர்கள் செய்த இந்த அனைத்து துரோகங்கள், பயங்கரமான வன்முறைகள் மற்றும் அநீதிகளுக்கு முன்னால் ஹமாஸ் அல்லது பிஎல்ஓவின் வன்முறையை எந்த விவேகமுள்ள மனிதனும் குற்றம் சாட்ட முடியாது.
இப்போது மில்லியன் கணக்கான பாலஸ்தீனிய மக்கள் காசாவில் திறந்த சிறைச்சாலையில் வாழ்கின்றனர். மேலும் மேற்குக் கரையிலும் இதே நிலை. பல தசாப்தங்களாக அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்காலத்தையும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் மனித கண்ணியத்தையும் அவர்கள் இழந்துள்ளனர். இந்நிலையில் சில மேற்கத்திய வலதுசாரிகள் பாலஸ்தீனிய மக்களை பயங்கரவாதிகளாகக் கூறுவது வேடிக்கையானது.
மேற்குலகின் நீதியை உலகம் இப்போது பார்த்து விட்டது. இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பிரிட்டிஷாரும் பின்னர் அமெரிக்கர்களும் அதை முழு உலகுக்கும் காட்டிவிட்டனர்.
பள்ளிச் சிறுவனாக இருந்தபோது அமெரிக்கத் திரைப்படங்களால் ஈர்க்கப்பட்ட நான். அமெரிக்கர்கள் மிகவும் நாகரீகமானவர்கள், நேர்மையானவர்கள், தைரியமானவர்கள், அமைதியை விரும்பும் நல்லவர்கள், உலகைக் காப்பாற்றுபவர்கள் என்று அப்போது நம்பினேன்.
வியட்நாம் போரின் போது, தீய, பழமைவாத, கொடூரமான வியட்-காங் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் நமது சிறந்த அமெரிக்கர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையில், காலி முகத்திடலில் உள்ள யுஎஸ்ஐஎஸ் நூலகத்தில் நியூஸ் வீக் மற்றும் டைம்ஸ் இதழ்களைப் படிப்பதில் அதிக நேரம் செலவிட்டேன்.
இந்த பத்திரிகைகள் அமெரிக்கர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்று பொய் சொல்லிக்கொண்டே இருந்தன.
சில ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து ஆதரவாளர்களையும் முட்டாள்களாக்கிவிட்டு படகு மக்கள் எனப் பிரபலமானவர்களை விட்டு அமெரிக்கர்கள் வியட்நாமில் இருந்து ஓடிப்போனது பின்னர் தான் தெரியவந்தது.
பின்னாளில் மேற்கத்திய பொய்களை நம்பிய என் முட்டாள்தனத்தை நினைத்து வெட்கப்பட்டேன். அப்போதுதான், வியட்-காங் உண்மையான ஹீரோக்கள் மற்றும் தேசபக்தர்கள் என்பதையும் உணர்ந்தேன்.
அவர்கள் தங்கள் மண்ணுக்காக உயிரைக் கொடுத்தவர்கள். அவர்கள் அமெரிக்கர்களுக்கு நல்ல பாடம் கற்பித்தார்கள். இன்றும் அந்த அமெரிக்க வியட்நாம் படைவீரர்கள் மன அழுத்தத்தினாலும் பதட்டத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வியட்நாம் மக்களுக்கு அமெரிக்கர்கள் என்ன செய்தார்கள் என்பது மற்றொரு நீண்ட கதை. இப்போதும் கூட அங்கிள் சாம் அதை மறைக்கிறார் அல்லது வெளிப்படுத்த வெட்கப்படுகிறார்.
வியட்நாமுக்கு நான் பலமுறை சென்றிருந்தபோது, வியட்நாமிய மக்களை மிகுந்த மரியாதையுடனும் மதிப்புடனும் பார்த்தேன்.
வேடிக்கையான விடயம் என்னவென்றால், ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் தற்போது வியட்நாமிற்கு குடிபெயர்ந்துள்ளனர். வியட்நாமிய பெண்களை திருமணம் செய்துகொண்டு மிகவும் வசதியான வாழ்க்கை வாழ்கின்றனர்.
மேற்குலகம், குறிப்பாக அமெரிக்கா, யாரையும் “பயங்கரவாதிகள்” என்றால், மேற்கத்திய படையெடுப்பாளர்களை சட்டப்பூர்வமாக எதிர்க்கும் மனிதர்கள் என்றும் தங்கள் மக்களுக்காக, தங்கள் நாட்டிற்காக தங்கள் உயிரைக் கொடுக்கத் தயாராக இருப்பவர்கள் என்றுமே கருத வேண்டியிருக்கிறது.
அதே மேற்குலகம் தனது சியோனிச கூட்டாளியுடன் இணைந்து பாலஸ்தீனிய மக்களின் சுதந்திரத்திற்கான நியாயமான போராட்டத்தை பயங்கரவாதம் என்று முத்திரை குத்தியிருக்கிது. தீவிரவாதிகள் பிறப்பதில்லை. அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.
சரியான அறிவும் புரிதலும் உள்ள ஒருவருக்கு பாலஸ்தீனம் ஏன் நரகப் படுகுழி ஆனது என்பதற்கு விளக்கம் தேவையில்லை.
இது அமைதியை விரும்பும் பாலஸ்தீன மக்கள் மீது சியோனிஸ்டுகள் அமெரிக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் உதவியுடன் தங்கள் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்காக செய்த குற்றமே தவிர வேறில்லை.
பாலஸ்தீனத்தை அழிக்க இஸ்ரேலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல பில்லியன் டாலர்களை இவர்கள் நன்கொடையாக வழங்குகிறார்கள். அமெரிக்காவில் உள்ள யூத லாபியே எந்த கட்சி அல்லது எந்த நபர் ஜனாதிபதியாக வர வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது.
ஒரு வகையில் அமெரிக்க அரசியல் இயந்திரம் யூத லாபியின் இறுக்கமான பிடியில் உள்ளது. பல நேர்மையான, கண்ணியமான அமெரிக்க அரசியல்வாதிகள் கூட சியோனிச அரசுக்கு எதிராக பேச பயப்படுகிறார்கள்.
இஸ்ரேலைக் காக்க முயற்சிக்கும் ஜோ பைடனின் ரோபோ நடத்தை பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. அவர் சியோனிச அரசாங்கத்தால் புனையப்பட்ட பொய்களைத் திரும்பத் திரும்பச் சொல்லி தன்னை முட்டாளாக்கிக் கொள்கிறார்.
நாற்பது குழந்தைகள் தலை துண்டிக்கப்பட்டனர்; பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்பதெல்லாம் அமெரிக்கர்கள் விழுங்கிய கோமாளிக் கதைகள். அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற்ற யூதப் பொதுமக்களின் பல மரணங்கள் கூட இஸ்ரேலிய குண்டு தாங்கிகளின் பொறுப்பற்ற துப்பாக்கிச் சூட்டின் விளைவாகும்.
தங்கள் சொந்த குடிமக்களைப் பற்றிக் கூட அவர்கள் கவலைப்படுவதில்லை என்ற பொது விதிக்கு இது பிரபலமான சான்று. அவர்கள் கண்மூடித்தனமாக மக்கள் மீது நாசகார ஏவுகணைகளை வீசினர். அதனால்தான் உடல்கள் மோசமாக சிதைந்து கருகின. கார்களும் வீடுகளும் தீக்கிரையாகின.
ஹமாஸ் போராளிகள் எடுத்துச் செல்லும் எந்த துப்பாக்கியாலும் இத்தகைய சேதத்தை ஏற்படுத்த முடியாது. இந்தத் துறையில் நிபுணராக இருப்பதால், இஸ்ரேல் அல்லது பைடன் அல்லது பிளிங்கன் அல்லது ஹிலாரி கிளிண்டன் கூட மறுத்தாலும், நான் இதனை உறுதியாகக் குறிப்பிடுகிறேன்.
பூனை பையில் இருந்து பாய்ந்த பிறகு, அந்தப் பிரச்சாரத்தின் பெரும்பாலான படங்களை இப்போது இஸ்ரேல் அகற்றியுள்ளது.
பாலஸ்தீனியர்களுடன் 1948 முதல் எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் ஒருபோதும் மதிக்கப்படவில்லை. மாறாக அவர்கள் எப்போதும் காட்டிக் கொடுக்கப்பட்டனர். ஏனெனில் இஸ்ரேலின் ஒரே நோக்கம் இனப்படுகொலையும் ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்களை அகற்றி இஸ்ரேல் என்ற ஒரே நாட்டை உருவாக்குவதும் மட்டுமே.
இரு நாடுகளின் தீர்வு என்பது இஸ்ரேலும் அமெரிக்காவும் உலகை ஏமாற்றும் உதட்டளவு மந்திரம் மட்டுமே. UN உடன்படிக்கையின்படி இனப்படுகொலையை மேற்கொள்ள, ஒரு தேசியத்தை, இனத்தை, அல்லது மதக் குழுவை பௌதீகரீதியாக அழிக்க குற்றவாளிகளின் தரப்பில் நிரூபிக்கப்பட்ட நோக்கம் இருக்க வேண்டும்.
ராஸ் செகல் எனும் யூத பேராசிரியர், இஸ்ரேல் போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இழைக்கும் இனப்படுகொலைக் குற்றவாளி என்று கடந்த வாரம் கூறியிருந்தார். 1948ல் இருந்து பாலஸ்தீனியர்களுக்கு சியோனிஸ்டுகள் இழைத்த அட்டூழியங்கள் பற்றி அவர் நீண்ட நேரம் உரையாற்றினார்.
பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் பற்றிய அறிஞரும், யூதருமான பேராசிரியர் நார்மன் ஃபிராங்கண்ஸ்டைன், அக்டோபர் 8ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இவ்வாறு கூறினார். “கடந்த 20 ஆண்டுகளாக காஸா மக்கள், அவர்களில் பாதிப் பேர் குழந்தைகள், வதை முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இன்று அவர்கள் முகாமின் சுவர்களை உடைத்தெறிந்துள்ளனர். அடிமைத்தனத்திற்கு எதிராக ஆயுதமேந்திய ஜான் பிரவுனின் எதிர்ப்பை நாம் மதிக்கிறோம் என்றால்; வார்சா கெட்டோவில் கிளர்ச்சி செய்த யூதர்களை நாங்கள் மதிக்கிறோம் என்றால், காசாவின் வீர எதிர்ப்பையும் நாம் மதிக்க வேண்டும் என்பதே தார்மீக தர்மமாகும்.
அவர் மேலும் கூறுகிறார், “நான் ஒருபோதும் வருந்த மாட்டேன் – மாறாக, அது என் ஆன்மாவின் ஒவ்வொரு இழையையும் சூடேற்றுகிறது – காசாவின் சிரிக்கும் குழந்தைகளை திமிர்பிடித்த யூத மேலாதிக்க அடக்குமுறையாளர்கள் இறுதியாக மண்டியிட வைக்கும் காட்சிகள்.
வானத்தில் மேலே உள்ள நட்சத்திரங்கள் கனிவுடன் கீழே பார்க்கின்றன. அதோ காஸாவின் ஆன்மாக்கள் அணிவகுத்துச் செல்கின்றன. ஹிட்லரின் வதை முகாம்களில் இருந்து தப்பிய பெற்றோர்களின் யூத அறிஞர்களிடமிருந்து வரும் வார்த்தைகள் இவை.
பைடன், , அன்டனி பிளிங்கன், ஹிலரி கிளின்டன் போன்ற அமெரிக்கத் தலைவர்கள், அப்பாவி பாலஸ்தீன மக்களுக்கு எதிராகப் பொய்களையும் வெறுப்பையும் பேசி, சியோனிஸ்டுகளைத்தான் பாதிக்கப்பட்டவர்களாகக் காட்ட முயல்வது துயரமானது.
அரசியல் ஆதாயத்திற்காக வெற்றுப் புழுகுகளை மனசாட்சிக்கு விரோதமாகப் பேசும் இவர்களின் ஒழுக்கச் சீர்கேட்டையே இது காட்டுகிறது. பேராசிரியர் நார்மன் ஃபிராங்கண்ஸ்டைன் ஒரு நாளுக்கு முன்பு ஹிலாரி கிளிண்டனை ஒரு நோய்பிடித்த பொய்யர் (pathological liar) என்று வர்ணித்தார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சமாதான ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்று அவர் (ஹிலாரி) PLO தலைவர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனால் உண்மை என்னவென்றால், அமெரிக்காவும் இஸ்ரேலும் எப்பொழுதும் வம்பு செய்து கொண்டேயிருந்தன. இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டவற்றை விட்டும் அவை வெருண்டோடின.
உண்மை என்னவெனில், பாலஸ்தீன மக்களை அழித்து அவர்களை ஒட்டுமொத்தமாக அகற்றும் இனப்படுகொலை மட்டுமே சியோனிஸ்டுகளின் ஒரே நோக்கம். அதைப் பற்றி எந்தக் கேள்வியும் இல்லை. சமாதானப் பேச்சுக்கள் என்று சொல்லப்படுபவை அனைத்தும் கண்துடைப்புக்களே.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ஜியோரா எய்லாண்ட் காசாவில் ஒரு மனிதாபிமான நெருக்கடியை இஸ்ரேல் உருவாக்க வேண்டும் என்று சமீபத்தில் கூறியிருந்தார்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் எகிப்தில் தஞ்சம் அடைய வேண்டும் என்றும் வளைகுடாவிற்கு இடம் பெயர வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கின்றனர். இஸ்ரேலின் பாதுகாப்பு அதிகாரிகள் காசா இறுதியில் கூடாரங்களின் நகரமாக மாறும், அங்கு கட்டிடங்கள் இருக்காது என்று கூறினர்.
பாலஸ்தீனியர்களை படகுகளில் ஏற்றி அவர்களுக்கு எது நல்லதோ அங்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் நிசிம் வதூரி கூறினார்.
அவர்கள் ஸ்காட்லாந்தில் தேடப்பட்டு வருவதால் அவர்களை அங்கு ஒப்படைப்போம் என்றார். இதைத்தான் இஸ்ரேலும் அதன் அமெரிக்க நட்பு நாடுகளும் திட்டமிடுகின்றன. மற்றவையெல்லாம் வெறும் பொய்.
சியோனிஸ்டுகளின் கூற்றுப்படி, பாலஸ்தீன பிரச்சினைக்கு இது தான் அவர்களின் இறுதி தீர்வு. யூதப் பிரச்சினைக்கான ஹிட்லரின் இறுதித் தீர்விலிருந்து இது எந்த வகையிலும் வேறுபட்டதல்ல. ஹிட்லர் ஜேர்மனியர்கள் அல்லாத வேற்றுமனிதர்களை அகற்ற விரும்பினார். யூதர்கள் ஜெர்மனிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக உணர்ந்தார்.
அதேபோல இங்கு புலம்பெயர்ந்த அன்னிய யூதர்கள் பாலஸ்தீன மண்ணின் மக்களை அகற்ற முயற்சிக்கின்றனர்.
இருப்பினும், எல்லா யூத மக்களையும் குற்றம் சாட்டுவது என் பங்கில் மிகவும் நியாயமற்றது. பெரும்பான்மையான யூத மக்கள் சியோனிஸ்டுகளின் தீய வடிவங்களை அம்பலப்படுத்துகின்றனர். உலகெங்கிலும் உள்ள பல யூதர்கள் பாலஸ்தீனியர்களுடன் இணைந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சியோனிஸ்டுகளாலும் அமெரிக்கர்களாலும் பாலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கண்டு முழு உலகமும் இறுதியாக விழித்துக் கொண்டிருப்பது இத்தனை பேரழிவுகளிலிருந்தும் வெளிவந்த ஒரு நல்ல விஷயம் என்று சொல்லலாம்.
அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்கள் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாதளவு குற்ற உணர்வுடன் இருந்தாலும், உலக மக்கள் பாலஸ்தீன மக்களின் அவலத்துடன் இருக்கிறார்கள். இஸ்ரேல் அரசு மீள முடியாத சேதத்துடன் அதன் மதிப்பை இழந்திருக்கிறது.
தற்செயலாக தொடரும் இந்த அவலம் இலங்கையில் வசிப்பவர்களுக்கும் சில பாடங்களை கற்றுத்தரலாம். இத்தகைய வன்முறைகளும் அவலங்களும் நமக்குப் புதிதல்ல. இனக் கலவரங்கள், மதக் கலவரங்கள், அரசியல் கலவரங்கள் எல்லாம் எங்களிடம் வழக்கமானவை.
நாட்டில் மக்கள் பட்டினி கிடக்கும் போதிலும், போர் அல்லது வன்முறைகள் கண்ணுக்கெட்டிய அளவில் தென்படாத போதும், பாதுகாப்புச் செலவினங்களுக்காக எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிக நிதியை ஒதுக்கியுள்ளார்.
எதிரிகளின் தலையை துண்டித்து பொதுவெளியில் தொங்க விடுவது நமக்கு சகஜம். பெண்களை நிர்வாணமாக்குவதும், அவர்களைக் கொல்வதற்கு முன்பு பொது இடங்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்வதும் எங்களுக்குப் புதிதல்ல.
ஈழப் போரின் போது இறந்த ஆண் பெண் இருபால் போராளிகளினதும் உடல்கள் நிர்வாணமாக்கப்பட்டு உழவு இயந்திரங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி எமது மனிதச் சீரழிவை வெளிப்படுத்தினர்.
தனிப்பட்ட முறையில், இதுபோன்ற நூற்றுக்கணக்கான வழக்குகளை நான் கையாண்டிருக்கிறேன்.
புத்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம் என்று கூறிக்கொள்ளும் நம் நாட்டிற்கு, நம் மக்களுக்கு என்ன நேர்ந்தது என்று ஆச்சரியப்படுகிறேன்.
எல்.ரீ.ரீ.ஈ யும் ஹமாஸுக்கு இணையான ஒரு போராளிக் குழு என்றே நான் கருதுகிறேன். இருவரும் ஒரு தரப்பினால் பயங்கரவாதிகள் என்று தாராளமாக முத்திரை குத்தப்பட்டவர்கள்.
இன்னொரு தரப்பினால் சுதந்திர போராட்ட வீரர்கள் என்று போற்றப்படுபவர்கள். இந்த இரு குழுக்களும் சரி என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஏனெனில் ஏற்கனவே கூறியது போல் பயங்கரவாதி என்பதன் வரையறை மிகவும் தற்சார்பானவை.
இருவரும் ஒரு நியாயமான காரணத்திற்காக போராடுகிறார்கள் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறையை நாடுகிறார்கள். 1956ல் இருந்து நாம் வன்முறையைப் பார்த்து வருகிறோம். ஆனால் இந்த அவலங்கள் எல்லாம் நமக்கு ஏன் என்று இன்னும் சிலருக்கு மட்டுமே தெளிவாகத் தெரியும்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தீய அரசியல்வாதிகளால் இலகுவான ஆயுதமாக இனக்கலவரம் பயன்படுத்தப்படுகிறது. அரசியல்வாதிகளின் தவறான செயல்களை மக்கள் மறக்கச் செய்வதற்கான சிறந்த ஆயுதம் இனவாதமே.
ஆனால் பாலஸ்தீனத்தில் நடப்பது இலங்கைக்கு இணையானதல்ல. தமிழர்களை கையாள்வதற்கு சியோனிஸ்டுகளிடம் இருந்து இலங்கையர்கள் ஆலோசனைகளைப் பெற்றனர். ஆனால் அவர்களுக்குச் சொல்லப்பட்ட அனைத்தையும் செய்யும் அளவுக்கு அவர்கள் புத்திசாலிகளோ அல்லது புத்திஜீவிகளோ இல்லை.
காலனித்துவம் என்பது அப்படித்தான். ஆனால் மேற்குக் கரையைப் போல் அல்லாமல், சிங்களக் குடியேற்றவாசிகள் ஏழைகள். ஆதரவற்ற விவசாயிகள். அவர்கள் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளைப் போல் தாக்குதல் துப்பாக்கிகளை ஏந்தி தமிழர்களின் வீடுகள் மற்றும் நிலங்களை வலுக்கட்டாயமாக கைப்பற்றவோ சுடவோ இல்லை.
வேண்டுமானால் ஒரு பிக்கு, இராணுவத்தின் உதவியுடன் தமிழரின் தனியார் காணியில் விகாரை ஒன்றைக் கட்டி, புத்தரின் பெயரைப் பயன்படுத்தி சிறு வியாபாரம் நடத்தியிருக்கலாம். இதுதவிர இலங்கையில் இனப்படுகொலை என்ற வார்த்தையே இல்லை. எங்களிடம் இருப்பது வடிகட்டிய முட்டாள்தனம்.
அறியாமை, கல்வியறிவின்மை, சாக்கடை அரசியலால் அது அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. முழு இலங்கையின் முன்னேற்றத்திற்கு ஒரு கூட்டாட்சித் தீர்வே தேவை. இரண்டு அரசு தீர்வு அல்ல.