ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டித்து அவர்களுக்கு எதிராக ஆயுத மற்றும் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என ஸ்பெயின் கோரிக்கை விடுத்துள்ளது
ஒரு காலத்தில் பலஸ்தீன மக்களின் சுதந்திரத்துக்கான ஆதரவை வழங்குவதில் முன்னணியில் செயல்பட்ட இலங்கைக்கு இஸ்ரேலை இந்த நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான நேரம் இன்னும் வரவில்லையா? காஸா மீதான மூர்க்கத்தனமான விமானத் தாக்குதல்களும் அங்குள்ள கிராமங்கள் பல தரை மட்டமாக்கப்பட்டுள்ளமை, காஸாவில் பலஸ்தீன மக்கள் மீதான இன ஒழிப்பு நடவடிக்கைகள் என்பனவற்றைக் காரணம் காட்டியாவது இஸ்ரேலை இந்த நாட்டிலிருந்து வெளியேற்ற முடியாதா?
இந்தக்கட்டுரையை எழுதும் தினமான 2023 நவம்பர் 2ம் திகதி வியாழக்கிழமை அன்று 8500க்கும் அதிகமான பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் 3500த்துக்கும் அதிகமான சிறுவர்களும் 1500க்கும் அதிகமான பெண்களும் அடங்குவர். 22000த்துக்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்துள்ளனர். ஒரு சில மாதங்களே ஆன குழந்தைகள் கூட இரத்தத்திலும் தூசியிலும் தோய்ந்து போயுள்ளன.
சில தகவல்களின் படி 690000 பலஸ்தீனர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இதில் ஐந்து லட்சம் யுவதிகளும் பெண்களும் அடங்குவர்.
25 பலஸ்தீன ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 50 வீதத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் தரை மட்டமாக்கப்பட்டுள்ளன. அரைவாசிக்கும் அதிகமான ஆஸ்பத்திரிகள் நாசமாக்கப்பட்டுள்ளன. 59 ஐக்கிய நாடுகள் சேவகர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
பலஸ்தீனர்களுக்கு தண்ணீர் விநியோகம், மின்சாரம், உணவு, மருந்துகள், எரிபொருள்கள் என்பனவும் தடை செய்யப்பட்டுள்ளன.
கடந்த மூன்று வாரங்களாக இந்த நிலை நீடிப்பதால் பட்டினியால் சாவும் நிலைக்கு அந்த மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களிடையே 50 ஆயிரத்தக்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்களும் காணப்படுகின்றனர்.
இதனிடையே ஸ்பெயினின் சமூக உரிமைகளுக்கான பதில் அமைச்சர் இயோன் பெலாரா இஸ்ரேலுடன் ஐரோப்பிய நாடுகள் தமது இராஜதந்திர உறவுகளை துண்டிக்க வேண்டும் எனவும் அந்த நாட்டின் மீது ஆயுத மற்றும் பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனஒழிப்பு நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு இன்னமும் வாய்ப்புக்கள் உள்ளன. காஸா பிரதேசத்தின் மீது குணடுத் தாக்குதல்களை நடத்திய இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாஹு மற்றும் ஏனைய அரசியல் தலைவர்கள் எல்லோரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் பெலாரா கேட்டுள்ளார்.
மத்திய கிழக்கின் சக்தி மிக்க இராணுவமாக தன்னைக் காட்டிக் கொள்ளும் இஸ்ரேலின் இன்றைய நிலை
இஸ்ரேல்- பலஸ்தீன முரண்பாட்டை அமெரிக்காவின் பைடன் நிர்வாகம் அனுகும் முறையைக் கண்டித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இன்றைய நிலை பலஸ்தீன மக்களுக்கும் அதேபோல் இஸ்ரேலுக்கும் மேலும் துயரமான நிலைமைகளை உருவாக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது அமெரிக்காவின் நீண்ட கால நலன்களுக்கு வழியமைக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய பங்காளிகளும் காஸாவில் இஸ்ரேல் இழைத்து வரும் யுத்தக் குற்றங்களை நியாயப்படுத்துகின்றனர். ஹமாஸ் இந்தப் பிரபஞ்சத்தின் முகப்பில் இருந்து முற்றாக அழிக்கப்பட வேண்டும் என நெத்தன்யாஹு தொடர்ந்தும் கூறி வருகின்றார். ஆனால் அதற்காக ஏன் அவர் பொதுமக்களைக் கொன்று அவர்களின் சொத்துக்களைத் தரைமட்டமாக்கி வருகின்றார்? என்பதுதான் கேள்வி.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டரஸ் பாதுகாப்புச் சபைக் கூட்டம் ஒன்றில் பேசும் போது இஸ்ரேல் மீது அக்டோபர் மாதம் ஏழாம் திகதி ஹமாஸ் இயக்கம் நடத்திய பயங்கரவாத தாக்குதலை எந்தவிதமான தயக்கமும் இன்றி கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை வேண்டுமென்றே பொது மக்கள் கொல்லப்படுவதையும், காயப்படுத்தப் படுவதையம், கடத்தப் படுவதையும், சிவிலியன் இலக்குகள் மீது ரொக்கட் தாக்குதல்கள் நடத்தப்படுவதையும் எந்த வகையிலும் நியாயப்படுத்தவும் முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸின் தாக்குதல்கள் வெறுமனே ஒரு இடைவெளியில் நடத்தப்பட்டவை அல்ல என்பதையும் அங்கீகரிக்க வேண்டியதும் முக்கியமானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் வன்முறைகளை வெளிப்படையாகக் கண்டித்த அவர் பலஸ்தீன மக்கள் 56 வருடங்களாக மூச்சைத் திணற வைக்கும் ஒரு ஆக்கிரமிப்புக்குள் தள்ளப்பட்டிருந்தனர். அவர்கள் தமது நிலங்கள் சட்ட விரோத குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வருவதையும், வன்முறைகளால் பாதிக்கப்பட்டு வருவதையும் தொடர்ந்து அவதானித்து வந்தனர். அவர்களது வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன, அவர்களது பொருளாதாரம் திணறும் நிலைக்கு வந்தது, அவர்களது மக்கள் இடம் பெயர்ந்தனர்.
தங்களது நிலைக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்து மறைந்து போனது என்றும் அவர் கூறினார்.
சகல தரப்பினரும் சர்வதேச சட்டங்களின் கீழான தத்தமது கடப்பாடுகளை மதிக்க வேண்டும். இராணுவ நடவடிக்கைகளின் போது பொது மக்கள் காப்பாற்றப்படுவதில் தொடர்ச்சியான கவனம் செலுத்தப்பட வேண்டும். ஆஸ்பத்திரிகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் வளங்கள் மதிக்கப்பட வேண்டும், இன்று சுமார் ஆறு லட்சம் பலஸ்தீன மக்களுக்கு அந்த வளங்களில் தான் தஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது.
காஸா பிரதேசம் மீதான இஸ்ரேலின் இடைவிடாத குண்டுத் தாக்குதல்கள், அதனால் ஏற்படும் பொது மக்களின் உயிர் இழப்புக்கள், மக்கள் வாழும் பகுதிகளின் ஒட்டுமொத்த அழிவுகள் எல்லாம் அதிகரித்து வருகின்ற நிலையில் பெரும் எச்சரிக்கையாகவும் மாறி உள்ளன என்று ஐ.நா செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் இதுவரை 32 ஐக்கிய நாடுகள் தீர்மானங்களை மீறி உள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதில்லை. காரணம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவால் இஸ்ரேலுக்கு வழங்கப்படும் தீவிர ஆதரவு.
அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள், இஸ்ரேலுக்கு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இருப்பதாகக் கூறி கண்மூடித்தனமாக இஸ்ரேலுக்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலைப்பாடு காரணமாக காஸா மீதான காட்டுமிராண்டி தாக்குதல்கள், பொது மக்கள் வாழும் குடியிருப்புக்கள் தரைமட்டமாக்கப்படுதல், அப்பாவி பொது மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றமை என எதையுமே அவர்கள் பொருட்படுத்துவதும் இல்லை.
இஸ்ரேலின் இனப்படுகொலைகளை கண்டித்தும், அப்பாவி மக்களின் குடியிருப்புக்கள் அழிக்கப்படுவதைக் கண்டித்தும் ஒரு போதும் அவர்கள் ஒரு வார்த்தை கூடக் கூறுவதில்லை. இந்த கொடுமைகளை முடிவுக்கு கொணடு வரக் கூடிய எல்லா நகர்வுகளையும் அவர்கள் தொடர்ந்து தடுத்தே வந்துள்ளனர்.
இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்துக்கு முடிவே இல்லை
இஸ்ரேல் காஸா மீதான தனது அராஜகத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லத் தேவையான நவீன ஆயுத வசதிகளையும் இந்த நாடுகள் தான் இஸ்ரேலுக்கு வழங்கி வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி பைடன், இந்திய வம்சாவழி பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஆகியோர் நேரடியாக இஸ்ரேலுக்கு விஜயம் செய்து பலஸ்தீன மக்கள் மீது இழைக்கப்பட்டு வரும் நெருக்குதல்களுக்கான தமது பூரண ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் மேற்குலக நாடுகளின் அரசுகள் மீதும் அரசியல்வாதிகள் மீதும் சியோனிஸ யூதர்கள் கொண்டுள்ள கட்டுப்பாட்டை அப்பட்டமாக அம்பலப்படுத்தும் வகையிலேயே இது அமைந்துள்ளது. இவர்கள் எல்லோருமே இஸ்ரேல் இதுவரை புரிந்த இப்போது புரிந்து வருகின்ற போர்க் குற்றங்களின் பங்காளிகள் ஆவர்.
உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு இந்த மோதல்களின் பின்னணி பற்றிய தெளிவுகள் இல்லை. உதாரணத்துக்கு பலஸ்தீன மக்கள் பல இறைதூதர்களின் வம்சாவழியில் வந்தவர்கள். இறைதூதர்களின் வாரிசுகள் பலர் பலஸ்தீன பூமியில் காலாகாலமாக பல நூற்றாண்டுகள் வாழ்ந்து வந்துள்ளனர்.
எந்த நேரத்திலும் மரணத்தை எதிர்ப்பார்த்து வாழும் பலஸ்தீன சிறுவர்கள்
துருக்கிப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த பலஸ்தீன பூமி முதலாம் உலக யுத்தத்தின் பின் பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சக்திகள் சியோனிஸ யூதர்களோடு இணைந்து பலஸ்தீன மக்களை அவர்களது சொந்த பூமியில் இருந்து விரட்டியடித்துவிட்டு முஸ்லிம்களை உருக்குலைய வைக்கும் வகையில் அங்கு யூத நாடு ஒன்றை உருவாக்க முடிவு செய்தனர். ஒரு காலத்தில் உலகில் மிகவும் அமைதியான பிரதேசமாக இருந்த மத்திய கிழக்கின் பலஸ்தீனம் இவ்வாறு தான் யுத்த பூமியாக மாற்றப்பட்டது.
ஐரோப்பாவிலும் ரஷ்யாவிலும் ஏற்கனவே சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்த யூதர்களைக் கொண்டு வந்து பலஸ்தீன பூமியில் குடியேற்றிய பின்னர்தான் அங்கு வன்முறைகள் தலைதூக்கின. பிரிட்டிஷ் ஆதிக்க அதிகார சபை, ஹகானா மற்றும் இர்குன் ஆகிய பயங்கரவாத குழுக்களை ஆதரித்து அரவணைத்து அவர்களுக்குத் தேவையான ஆயுதப் பயிற்சிகளையும் அளித்தது.
மெனாச்சம் பெகின், இட்ஷாக் ஷாமிர் ஆகிய இருவருமே இந்த குழுக்களின் தலைவர்களாக அன்று இருந்தனர். பிற்காலத்தில் இஸ்ரேலிய மக்கள் இவர்கள் இருவரையும் தமது பிரதமர்களாகவும் தெரிவு செய்தனர். பலஸ்தீன பூமியில் ஆரம்ப கட்டத்திலேயே பயங்கரவாதத்தை விதைத்து இன ஒழிப்புக்கு தூபமிட்டவர்கள் தான் இவர்கள்.
இவர்களின் பயங்கரவாதத்தில் இருந்து தப்பிய பலஸ்தீனர்கள் தான் காஸா பகுதியிலும் மேற்குக் கரை பகுதியிலும் உலகின் ஏனைய நாடுகளின் அகதி முகாம்களிலும் தஞ்சம் புகுந்தனர். உலக பயங்கரவாதத்தின் ஞானத் தந்தைகளான இந்த சியோனிஸ் யூதர்கள் பள்ளிவாசலுக்குள் தொழுது கொண்டிருந்த மக்களை உள்ளே வைத்து பூட்டி உயிரோடு கொழுத்தி பின்னர் அந்த பள்ளிவாசல்களையும் மூடினர்.
இவ்வாறு உரிமைகள் மறுக்கப்பட்டு சுதந்திரம் பறிக்கப்பட்ட காஸா மற்றும் மேற்குக் கரை பகுதிகளைச் சேர்ந்த பலஸ்தீன மக்கள் தான் இன்று தமது சுதந்திரத்துக்காகவும் உரிமைகளுக்காகவும் சுய கௌரவத்துக்காகவும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
இருந்தாலும் கூட பலஸ்தீன மக்களை அவர்களது சொந்த பூமியிர் இருந்து துடைத்தெறிந்து விட்டு மத்திய கிழக்கு முழுவதையும் கட்டுப்படுத்தும் வகையில் அகண்ட இஸ்ரேல் அரசை உருவாக்கியே தீருவோம் என அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய சகாக்களும் கங்கனம் கட்டி செயற்படுகின்றனர்.
அக்டோபர் 7ல் ஹமாஸ் இஸ்ரேலை தாக்குவதற்கு முன்னர் கூட பலஸ்தீன பகுதிகளில் இருந்து பலஸ்தீன மக்களை முழுமையாக இனச் சுத்திகரிப்பு செய்து எகிப்தின் சினாய் பாலைவனம் நோக்கி அவர்களை துரத்துவது தான் சியோனிஸ சிந்தனை வட்டங்களின் திட்டமாக இருந்தது.
காஸாவை முழுமையாகக் கைப்பற்றி அதை இஸ்ரேலின் காலணித்துவ பகுதியாக வைத்திருப்பது தான் அவர்களின் திட்டம். இந்த திட்டங்களுக்கான செலவுகளை கூட அவர்கள் மதிப்பிட்டு உரிய நிதி ஒதுக்கீடுகளையும் செய்துள்ளனர்.
இப்போது இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தனத்துக்கு எதிராக முழு உலகிலும் பிரம்மாண்டமான கண்டனப் பேரணிகள் இடம்பெற்று வருகின்றன.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய மேற்குலக வல்லாதிக்க சக்திகளால் பதவி வழங்கப்பட்டு இன்று அதை அலங்கரித்துக் கொண்டிருக்கும் சில அரபுலக சர்வாதிகாரிகள் மோதல்கள் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வாரங்கள் கழிந்துள்ள நிலையில் 8500க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு காஸா பிரதேசம் உலகில் மனிதர்கள் வாழ தகுதியற்ற பிரதேசம் என்ற நிலை உருவாக்கப்பட்ட பின் யுத்த நிறுத்தம் பற்றி பேசுகின்றனர்.
இப்போது தான் அவர்கள் நித்திரையில் இருந்து விழித்துக் கொண்டது போல் தெரிகின்றது. இன்றைய நிலையில் மேற்கு கரை பிரதேசத்தையும் இஸ்ரேல் விட்டு வைக்கவில்லை. அங்கும் 1500க்கும் அதிகமான பலஸ்தீனர்களைக் கைது செய்து இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது.
இஸ்ரேலின் கொடுமைகளை சகித்துக் கொள்ள முடியாமல் மேற்குலகிலும் உலகின் ஏனைய பாகங்களிலும் மக்கள் கோபத்தால் கொதிப்படைந்துள்ளனர். பலஸ்தீனத்தில் இஸ்ரேல் புரிந்து வரும் யுத்தக் குற்றங்களுக்கு தமது நாடுகள் ஒத்துழைப்பு வழங்கி வருவதை மக்கள் வன்மையாகக் கணடித்துள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலைகளின் கீழ் இலங்கை இங்கிருந்து இஸ்ரேல் தூதரகத்தையோ அல்லது அதன் இராஜதந்திரிகளையோ வெளியேற்றும் என பெரிதாக எதிர்ப்பார்க்க முடியாது.
இஸ்ரேல் இந்த நாட்டுக்குள் ஒவ்வொரு தடவையும் தனது சொந்த நலனை மட்டுமே கருதி, பின் கதவு வழியாகத் தான் பிரவேசித்துள்ளது. இதே இஸ்ரேல் தான் இலங்கையில் ஈழப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சம காலத்தில் தனது நாட்டு பயிற்சி முகாம்களுக்குள் எல்டிடிஈ க்கும் இலங்கை இராணுவத்துக்கும் பயிற்சிகளை அளித்துள்ளது. இஸ்ரேலைப் பொருத்தமட்டில் இலங்கையர்கள் குரங்குகள் என வர்ணிக்கப்படுபவர்கள் என்பதும் இங்கு நினைவூட்டத்தக்கது.