கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் டிசம்பர் மாதம் பணவீக்கம் 4 வீதமாக உயர்வடைந்துள்ளது.
இது கடந்த நவம்பர் மாதம் 3.4 வீதமாக பதிவாகியிருந்தது. இந்நிலையில் டிசம்பர் மாதம் 4 வீதமாக உயர்வடைந்துள்ளது.
அதன்படி கடந்த நவம்பர் மாதத்தில் 3.6 சதவீதமாகப் பதிவான உணவுப்பணவீக்கம் டிசம்பரில் 0.3 சதவீதமாகவும், நவம்பரில் 6.8 சதவீதமாகப் பதிவான உணவல்லாப்பணவீக்கம் டிசம்பரில் 5.8 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணின் மாதாந்த மாற்றம் டிசம்பர் மாதத்தில் 0.89 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
இதற்கு உணவுப்பொருட்களின் விலைகளில் அவதானிக்கப்பட்ட 1.16 சதவீத அதிகரிப்பும், உணவல்லாப்பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள், கட்டணங்களில் அவதானிக்கப்பட்ட 0.27 சதவீத வீழ்ச்சியும் காரணமாக அமைந்துள்ளன.
அதேவேளை பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தைப் பிரதிபலிக்கின்ற மையப்பணவீக்கம் கடந்த நவம்பர் மாதத்தில் பதிவான 0.8 சதவீதத்திலிருந்து டிசம்பரில் 0.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
பொருத்தமான கொள்கை வழிமுறைகள் மற்றும் நன்கு நிலைநிறுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்ப்புகள் என்பவற்றின் மூலம் துணையளிக்கப்பட்டு, பணவீக்கமானது நடுத்தரகாலத்தில் 5 சதவீதம் எனும் இலக்கிடப்பட்ட மட்டத்தை அண்மித்து ஸ்திரமடையும் என எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை எதிர்காலத்தில் பணவீக்கம் பெரிய அளவில் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக பொருளாதார ஆய்வாளர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.
இந்த பணவீக்கத்தை தாக்கம் மக்களிடையே பாரியளவில் இருக்குமெனவும் குறிப்பிட்டுள்ளனர்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படுவதே இதற்கு முக்கிய காரணமாகும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.
வரி விதிக்கப்படாத பல்வேறு வகையான பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதாலும், ஏற்கனவே வரி விதிக்கப்படும் பொருட்களின் மீதான வரிச்சுமை அதிகரிப்பதாலும் எதிர்காலத்தில் பணவீக்கம் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படுவதன் விளைவுகளை மக்கள் ஏற்கனவே அனுபவித்து வருவதாகவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
வெட் வரி அதிகரிப்பினால் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக சில வர்த்தகர்கள் ஏற்கனவே பொருட்களை சேமித்து வைத்து பின்னர் விற்பனை செய்வதற்கு முயற்சித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.