புத்தளம் கல்பிட்டி நாவற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் 2023 ஆம் ஆண்டில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்களையும், வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று அண்மையில் (04) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் பீ.ஜெனட்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேத்தாப்பலை பங்கின் உதவி பங்கு தந்தை அருட்திரு ஸ்டணி அடிகளார், புத்தளம் வலயக் கல்விப்பணிமனையின் பிரதி கல்வி பணிப்பாளர் எம்.ஏ.எம்.அனீஸ், ஓய்வு நிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர் இஸட்.ஏ.சன்ஹீர் உள்ளிட்ட கல்பிட்டி கோட்டத்தின் ஆரம்ப பிரிவு மற்றும் தமிழ் மொழிக்கான ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வினை அழகுபடுத்தும் வகையில் அன்றைய தினம் பாடசாலையின் ஆரம்ப பிரிவினரால் “மின்னும் தாரகைகள்” எனும் சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
அதிபரின் வாழ்த்துச் செய்தியுடன் ஆரம்பிக்கும் இந்த “மின்னும் தாரகைகள்” சஞ்சிகையில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் சாதனை பற்றிய மீள் பார்வை, புலமைப் பரிசில் பரீட்சையில் பெற்ற அடைவுகள், ஆசிரியர்களின் அனுபவ பகிர்வு, மாணவர்களின் நிகழ்வுகள் தொடர்பான நிழற்படங்கள் என கச்சிதமாய் இதழ் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
(தகவல்:எம்.யூ.எம்.சனூன்)