முனீர் உஸ்தாத்..! ஆன்மீகப் பக்கங்களில் பல அத்தியாயங்களை வாழ்ந்தவர்…!

Date:

கடந்த சில தினங்களுக்கு முன் காலமான பிரபல மார்க்க அறிஞர் புத்தளம் இஸ்லாஹியா பெண்கள் அரபு கலாசாலையின் அதிபர் உஸ்தாத் அஷ்ஷெய்க் முஹம்மத் முனீர் (முனீர் மௌலவி) நினைவாக பிரபல கவிஞர் மரிக்கார் அவர்களின் வரிகளை வாசகர்களுக்கு தருகின்றோம்.

முனீர் உஸ்தாத்..!
ஆன்மீகப்பக்கங்களில் பல அத்தியாயங்களை வாழ்ந்தவர்…!
—————–
எனது வாழ்க்கையில் இன்னொரு இறுக்கமான நாள்…
அடக்கிக் கொள்ள முடியாத ஆழ்மனதின் அழுகை,
உள்ளத்தின் அணைக்கட்டை உடைத்துப் பாய்வதை உணர்ந்த நாள்…!

ஒரு மாணிக்கத்தை…
மண்ணில் புதைத்து வீடு திரும்பிய நாள்…

முனீர் உஸ்தாதை முத்தமிட்டு
நானும் எனது கண்ணீரும் காய்ந்து போன போதும்…

இன்னும், அவரது நினைவுகளே இதயம் முழுவதையும் கைது செய்து வைத்திருக்கிறது…!

உயிரின் தெருவெல்லாம்…
அவர்பற்றிய இளமைக்கால நினைவுகள்…

அவரது சின்னப்பிள்ளை போன்ற சிரிப்பும்… தோளில் கைபோட்டுக் கதைக்கும் ஸ்பரிசமும்…

அதிகாலை சுபஹில்… அந்த மெல்லிய இருளில்… பாயில் வந்தமர்ந்து தர்பியா வகுப்பெடுக்கும் தருணங்களும்…

மனதெல்லாம் படர்கிறது…!
……

இஸ்லாமியப்பணியை…
இதயத்தால் நேசித்தவர்… இறுதிவரை சுவாசித்தவர்…

முனீர் காக்காவாக… முனீர் மௌலவியாக… முனீர் உஸ்தாத்… ஆக
புத்தளத்தின் ஆன்மீகப்பக்கங்களில் பல அழகான அத்தியாயங்களை வாழ்ந்தவர்…!
இஸ்லாஹிய்யாவில் இணைவதற்கு முன்பே…

பல நூறு இளைஞர்களின் மாணவப் பருவத்தை…
கருத்தாலும் உறவாலும் கனதியான பயிற்றுவிப்பினாலும்… அல்லாஹ்வின் பால் திரும்பியவர்…!

“வீட்டிலிருந்து வரும்போது பிரயாண துஆ ஓதினீங்களா…?”
“இல்லை… மறந்துவிட்டது…”

“சரி மீண்டும் வீட்டுக்குப் போய் ஓதிக்கொண்டு வாரீங்களா…? இன்ஷா அல்லாஹ் இனி மறக்காது…”

போன்ற சம்பவங்களால் களத்தில் கற்பித்தவர்…!
பக்கத்தில் அமரச்செய்து… பழைய மீன்கறியும் பாணும் உண்டு…

“படிங்க… நீங்க நல்லா வருவீங்க…” என்ற ஈரமான வார்த்தைகள் தூவி எமக்குள் இலட்சியம் வளர்த்தவர்…!

மெல்லிய உணர்வுகளின் சொந்தக்காரர்…!
….
முனீர் உஸ்தாத்…
அல்லாஹ்வின் கலாமை எமது மண்ணில் அழகாக முன்வைத்த அரிதான மனிதர்களில் ஒருவர்…!

அல் குர்ஆன் வகுப்புகள்… அவரால் நடாத்தப்படும்போது மட்டும்…
அதிலே ஒரு மின்சாரம் இணைந்திருக்கும்…

துல்லியமான சிந்தனைகளும்,
ஆழமான வாசிப்பின் அடையாளங்களும்… அந்த வகுப்பை அடர்த்தியாக்கியிருக்கும்…!

அவை எம்மை ஊடறுப்பதை உள்ளம் உணரும்…!
தனது ஆயுட்காலத்தில் அத்தகைய நூற்றுக்கணக்கான வகுப்புகளை நடாத்தி…
ஆயிரக்கணக்கான மனித மனங்களில் அல்லாஹ்வின் தீனை அமர்த்தியவர்…

எப்போது அழைத்தாலும்… எந்த நிலையில் இருந்தாலும்…
காய்ச்சலும் Panadol லுமாய் உடல் நிலை உணர்ந்தாலும்…
வளவாளராய் வரத்தவறாதவர்…!
…….

‘இஸ்லாஹிய்யா’ எனும் மனித நிறுவனத்தையும்…
தனது தஃவா களத்தின் ஓர் அங்கமாகவே அவர் பார்த்தார்…

உயிருள்ள தாஇயாக்களை உற்பத்தி செய்யும் ஒரு சோலைவனமாக அந்த வளாகத்தை வளர்த்தார்…!

வகுப்பறையில்… வாசிக சாலையில்… மனம்கசியும் மாலை அமர்வுகளில்…
மாணவ மனங்களில் அல்லாஹ்வின் ஆசைகளை அறிமுகம் செய்தார்…!

தனது வலையமைப்பில் பிரகாசிக்கும் அனைத்து வளங்களையும் அழைத்துவந்து…

அந்த வேர்களுக்கு நீர் ஊற்றினார்…
தனது ஆயுளின் அதிநீண்ட காலத்தை கொடுத்து,
உலகின் பல பாகங்களிலும் இறை தீனை வாழவைக்கும் 700 பிள்ளைகளை பிரசவித்திருக்கிறார்…!
…………..

எனது நினைவுகளின் சுவடுகளில்… கல்லூரிக்கு வெளியிலும்…
சமூகத்தின் கல்விக்காக, காத்திரமான பங்களிப்பிற்காக மிக நீண்ட தூரம் நடந்தவர் முனீர் உஸ்தாத்…

புத்தளத்தில் PILLARS, அவரது ஆசைகளுக்கு ஓர் அடையாளம்…!
அதன் தலைமை Zanhir ZA sir இன் diary குறிப்புகள்… அந்த ஆர்வத்துக்கான ஆதாரம்…!

பல கல்விமான்களின் கண்ணீர் துளிகள்…, சமூக ஆர்வலர்களின் ஆக்கங்கள்…
அவர் கொண்டிருந்த தாகங்களுக்கான அத்தாட்சிப் புத்தகம்…!
…..

அறிவு மட்டுமல்ல… எளிமையும்…
அவரது அமைதியும்… பணிவும், பண்பாடும்… தன்னை எப்போதுமே தாழ்த்திக்கொள்ளும் இயல்புகளும்…

மனித மனங்களில் அவரது அந்தஸ்தை உயர்த்தி விட்டது…
எனது வாழ்நாளிலேயே…

அவரை ஒரு ஆடம்பர ஆடையில் நான் கண்டதில்லை…
அதிகம் கோபித்துப் பார்த்ததில்லை…

தன்னிடம் இல்லை என்று என்றேனும் சொன்னதில்லை…
இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் கூட வாழ்க்கையை கடிந்து கொண்ட ஒரு வசனத்தையேனும் பாவித்ததில்லை…

தனது மரணத் தருவாயில் கூட,
கல்லூரிக்காக யாரோ அன்பளிப்பு செய்த ஒரு தொகை பணத்தை, என்னிடம் ஒப்படைக்குமாறு தன் பிள்ளைகளிடம் சொல்லியிருந்தார்.
அழகானவர்…

அல்லாஹ் அளித்த வாழ்வை அப்படியே ஏற்றுக்கொண்டவர்…!
….

வயதுகள் நரைக்கும் முன்னே…
அந்த ஆத்மா தன் வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறது….

அல்லாஹ்வின் அற்புதமான
பரிசுப்படைப்புகளை பார்க்கச் சென்றிருக்கிறது….

மஸ்ஜித் நிறைந்த
மனித வெள்ளத்தில்….

அதிகமான மனிதர்களின்
அழுகைச் சத்தங்களுக்கு மத்தியில்…

உயிருள்ள துஆக்களின் அருகில்…
அந்த அமைதியான வாழ்க்கை
நிறைவுக்கு வந்திருக்கிறது…!

….
யா ரஹ்மான்…
அவரை மன்னிப்பாயாக…!

உனது பாதையில் உழைத்த…
இந்த ஏழையின் வாழ்வை ஏற்றுக்கொள்வாயாக…!

மதிப்பாயாக…
மனம் குளிரும் வாழ்வொன்றை
சுவனங்களால் பரிசளிப்பாயாக…!

புத்தளம் மரிக்கார்

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...