அரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி நிறுவனருமான இம்ரான் கான் மற்றும் துணைத் தலைவர் ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு மறைக்குறியீட்டு தொடர்பான வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தானில் உள்ள சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
எனினும் தனது அரசாங்கத்தை கவிழ்த்து, தன்னைப் பிரதமர் அலுவலகத்தில் இருந்து நீக்குவதற்கான சதியை அந்த மறைக்குறியீடு சுட்டிக் காட்டியதாக இம்ரான் கான் பலமுறை கூறியிருந்தார்.
இந்த வழக்கில் இம்ரான் கான் மற்றும் குரேஷிக்கு எதிராக 10 சாட்சிகள் வாக்குமூலம் அளித்திருந்தனர். பாகிஸ்தானின் விசாரணை ஆணையம் (எஃப்ஐஏ) மூலம் அவர்களின் சாட்சியத்தை பதிவு செய்தது.
இதனிடையே கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் பிரதமர் பதவியை இம்ரான் இழந்தார்.
இதையடுத்து அவர் மீது 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வகையில், தோஷகானா வழக்கில் இஸ்லாமாபாத் நீதிமன்றம் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததை அடுத்து, ஆகஸ்ட் 5, 2023 அன்று அவர் அட்டாக் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அவரின் தண்டனையை நிறுத்தி வைத்தது. ஆனால் பின்னர் அவர் மறைக்குறியீட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அட்டாக் சிறையில் இருந்தார். இந்த சூழலில் தான் அவருக்கு இந்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.