களனி ஆற்றில் நீராட சென்ற நிலையில் முதலை கடித்து உயிரிழந்த சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடற்படை மற்றும் சுழியோடி அதிகாரிகள் இணைந்து நேற்று (17) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து சுமார் 500 மீற்றர் ஆழத்தில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடுவலை – வெலிவிட்ட புனித அந்தோனி மாவத்தையில் வசிக்கும் 09 வயதுடைய பிரபோத் பெரேரா எனும் சிறுவனே நேற்று முன்தினம் (16) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடுவலை – வெலிவிட்ட புனித மரியாள் வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி பயின்றுவந்த சிறுவன் தமது பாட்டி மற்றும் இளைய சகோதரருடன் நீராடச் சென்றுள்ளார்.
பாட்டி துணி துவைத்துக் கொண்டிருந்த போது, தனது தம்பியுடன் நீந்திக் கொண்டிருந்த நிலையிலே சிறுவனை முதலை இழுத்துச்சென்றுள்ளது.
குறித்த சிறுவனை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் மற்றும் கடற்படையினர் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த பின்னணியிலே, சிறுவனின் சடலம் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த சடலம் இன்று (18) பிரேத பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.