காசாவில் தினசரி சராசரியாக 250 பேர் கொல்லப்படும் நிலையில் அங்கு 21 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற எந்த ஒரு போரை விடவும் தினசரி உயிரிழப்பு அதிகமாக உள்ளதாக பிரிட்டனைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான ஒக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.
காசா மீது இஸ்ரேல் மூன்று மாதங்களை தாண்டி நடத்தும் தாக்குதல்களில் 23,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட நிலையில் ஒக்ஸ்பாம் (11) வெளியிட்ட அறிவிப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.
நூற்றாண்டின் ஆரம்பம் தொடக்கம் மற்ற மோதல்களில் தினசரி கொல்லப்படுவோர் எண்ணிக்கை ஒப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு நாளொன்றுக்கு சராசரியாக சிரியாவில் 96.5, சூடானில் 51.6, ஈராக்கில் 50.8, உக்ரைனில் 43.9, ஆப்கானிஸ்தானில் 29.8, யெமனில் 15.8 பேர் பலியாகியுள்ளனர்.
வாரத்துக்குத் தேவையான உணவு உதவியில் 10 வீதமானது மாத்திரமே கிடைக்கப்பெறும் நிலையில் காசாவுக்குள் உதவிகள் செல்வதை இஸ்ரேல் கட்டுப்படுத்துவது மேலும் அழிவை ஏற்படுத்தி வருவதாக ஒக்ஸ்பாம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு (HRW) தனது உலக அறிக்கை 2024 ஐ வெளியிட்டது.
அதில் காசாவில் உள்ள பொதுமக்கள் ‘கடந்த ஆண்டில் சமீப வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவில் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர், தாக்கப்பட்டுள்ளர், துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளர் மற்றும் கொல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்தப்போரில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் மற்றும் பள்ளிகள், மருத்துவமனைகள், மசூதிகள் மற்றும் கடைகள் தரைமட்டமாகியுள்ளன. காஸா முழுவதும் சுமார் 70 சதவீத பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக ஐநா கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.