TIN இலக்கம் பெப்ரவரி முதல் அமுல்: வரி செலுத்தாதவர்களை வரி வலைக்குள் கொண்டு வர தீர்மானம்!

Date:

நாட்டில் வருமான வரி செலுத்தக்கூடியவர்கள் 10 இலட்சம் பேர் இருந்தும், 05 இலட்சம் பேர் மாத்திரமே வரி செலுத்தி வருவதால், மறைமுக வரியை குறைக்கவும், நேரடி வரியை அதிகரிக்கவும், வரி ஏய்ப்பு செய்யும் சுமார் 05 இலட்சம் பேரையும் வரி வலைக்குள் கொண்டு வர வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

வரி செலுத்துபவர் ஒரு நாட்டில் ஸ்திரத்தன்மையை அடைந்த பலம் வாய்ந்த குடிமகன் என்றும், அது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், இந்த நாட்டு மக்களும் இத்தகைய மனப்பான்மையைக் கொண்டுவருவது நாட்டின் அபிவிருத்திக்கு உதவும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், எதிர்வரும் பெப்ரவரி முதல் திகதியில் இருந்து TIN இலக்கத்தை அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சரவை அந்தஸ்தற்ற அரச பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சர் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

கடந்த வருட இறுதிக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 08% ஆக இருந்த அரச வருமானத்தை 10% ஆக அதிகரிக்க முடிந்தது.

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அதை 12% ஆக உயர்த்த இலக்கு வைத்துள்ளோம். ஓரளவு நிலையான பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக மாறுவதற்கு 2025 ஆம் ஆண்டளவில் 15% ஆக அதிகரிக்க எதிர்பார்க்கிறோம்.

மேலும், வெட் வரிக்கு சில திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இதுவரை 15% ஆக இருந்த வற் வரி 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 80 மில்லியன் ரூபாவாக இருந்த வற் வரி எல்லை 60 மில்லியன் ரூபாவாக அமையும்.

2001 இல் வற் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகள் வற் வரிக்கு உட்பட்டது.

அதில் குறைந்த எண்ணிக்கையிலான பொருட்களுக்கு வரி திருத்தச் சட்டத்தின் ஊடாக விலக்களிக்கப்பட்டன.

விலக்கு அளிக்கப்பட்ட 138 பொருட்கள் மற்றும் சேவைகளில், 97 வகையானவை இந்தத் திருத்தத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன.

VAT இன் திருத்தத்தின் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக அரச வருமானம் 2.07% இனால் உயரும். இது 645 பில்லியன் ரூபாய். வரி விகிதங்களின் அதிகரிப்புடன் பணவீக்கம் 2.5% அதிகரிக்கும் என மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவு பகுப்பாய்வு செய்துள்ளது.

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதன் மூலம் பணவீக்கத்தை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் மீண்டும் 5%க்குக் கொண்டு வர முடியும் என மத்திய வங்கியும் நிதி அமைச்சும் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

70% பணவீக்கம் இருந்த நாட்டில் தற்போது 5% பணவீக்க விகிதத்தை பேணவே நாம் முயற்சிக்கிறோம். அத்துடன், இந்த நெருக்கடி நிலையிலும் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது எமது நிதி முகாமைத்துவத் திறன்களின் தனித்துவமான அம்சமாகும்.

இன்று நேரடி வரிகள் 30% ஆகவும் மறைமுக வரிகள் 70% ஆகவும் உள்ளது. இந்த வரி விகிதத்தை மாற்றி, நேரடி வரி விகிதத்தை 40%க்கு கொண்டு வருவதே எமது இலக்கு. உலகில் அபிவிருத்தி அடைந்த ஒரு நாட்டின் நிலை அதுவேயாகும்.

வரி செலுத்தக்கூடிய பலம் வாய்ந்த 10 மில்லியன் மக்கள் உள்ளனர், ஆனால் தற்போது 05 இலட்சம் பேர் மட்டுமே வரி செலுத்துகின்றனர்.

எனவே, வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டறிந்து, அவர்களை வரி வலைக்குள்ளே கொண்டு வர வேண்டும். பின்னர் மறைமுக வரிகளை குறைக்க முடியும்.

பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து TIN இலக்கத்தை அமுல்படுத்தத் தயாராகி வருகிறோம். தற்போது அதனைப் பதிவு செய்வதில் சிக்கல்கள் உள்ளன. மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக உள்ளதால் தான் அந்தப் பிரச்சினைகள் தோன்றியுள்ளன.

எனவே பிரதேச செயலக மட்டத்தில் அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஆலோசித்து வருகிறோம். அதனை ஒன்லைன் முறை மூலம் செயற்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...