சிவில் சமூகம் பலம் பெற்றால் எமது நாடு பாதுகாக்கப்படும்; ஜமாஅத்தே இஸ்லாமியின் சுதந்திர தின செய்தி

Date:

76 ஆவது சுதந்திர தினத்தை நினைவு கூறும் இவ்வேளையில் எம் தேசத்தின் மையப் பிரச்சினைகளின் பக்கம் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தெரிவித்துள்ளது.

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜமாஅத்தே இஸ்லாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
அதில் எமது நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில் சுதந்திர தின வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

சுதந்திரத்தின் அருமை பெருமைகளை ஆண்டுதோறும் நினைவுபடுத்துகின்றோம். எமது நாடு அதன் சுதந்திர போராட்ட காலத்திலிருந்து பல சாதனைகளை புரிந்துள்ளது.

இலவச கல்வி, இலவச சுகாதார சேவை, சர்வசன வாக்குரிமை, ஜனநாயக ஆட்சி முறை, அணிசேரா கொள்கை. அதிகார பரவலாக்கம் என சமூக தளத்தில் பல முற்போக்கான அம்சங்கள் சுதந்திரத்தால் சாத்தியமாகியுள்ளது.

எனினும் பிரச்சினைக்குரிய விவகாரங்கள் பெருமைக்குரிய விவகாரங்களை பின்னோக்கி தள்ளுகின்றன. தோல்வியடைந்த நாடுகளுக்கு முன்னுதாரணமாக கூறப்படும் நாடுகளில் ஒன்றாக எமது நாடு மாறிவிட்டது.
புத்திஜீவிகளின் வெளியேற்றமும் முதலீட்டாளர்களின் அச்சமும் கூர்மைப்படுத்தப்படும் இனவாதமும் சட்ட, நிர்வாகத்துறைகளில் நடைபெறும் அசமந்தப் போக்கும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கைகளை தகர்த்துக் கொண்டிருக்கிறது.

கடந்த 75 வருடங்களாக நடைபெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் மக்கள் எதிர்பார்ப்புகளுடன் கட்சிகளையும் தலைவர்களையும் மாற்றி மாற்றி பரிச்சார்த்தம் செய்ததில் தோல்வியடைந்து விட்டதாகவே கருதுகின்றனர்.

மக்களே மக்களை ஆள வேண்டிய ஜனநாயக நாட்டில் மக்களை கலந்தாலோசிக்காமலேயே மக்களுக்கு எதிரான முடிவுகள் எடுக்கப்படுவதையும் அது அவர்கள் மீதே திணிக்கப்படுவதையும் பார்த்த மக்கள் தங்களைத் தாங்களே தூற்றிக் கொள்கின்றனர்.

தனியார் துறையின் ஏகபோகத்தை கட்டுப்படுத்தவும் இலாப நோக்கத்தை மட்டுப்படுத்தவும் கொண்டுவரப்பட்டதே அரச துறை நிறுவனங்களாகும்.

அவை இன்று நஷ்டத்தை உருவாக்கும் நிறுவனங்களாக மாற்றப்பட்டு தனியார் துறைக்கு படிப்படியாக தாரை வார்க்கப்படுகிறது. நம் இயற்கை வளங்களும் இதர வளங்களும் நம் நாட்டு மக்களின் நலங்களுக்காக பயன்படுத்தப்படாமல் தனி நபர்களாலும் வெளிநாடுகளாலும் சூறையாடப்படுகிறது.

நமக்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உலக வங்கியும், பன்னாட்டு நிதி நிறுவனங்களும் தீர்மானம் எடுக்கிறன. இவற்றையெல்லாம் காணும் மக்கள் நமது சுதந்திரத்தில் சந்தேகம் கொள்கின்றனர்.

சுயநலத்தையும் சுரண்டலையும் இலக்காக கொண்ட வல்லரசுகளின் பிடியிலேயே நமது நாடு இன்னும் சிக்கியிருக்கிறது. பதவி மோகத்தையும் ஏமாற்றுதல்களையும் பண்பாகக் கொண்டவர்களே தேசிய அரசியலை மாறி மாறி கையாளுகின்றனர்.

நமது நாட்டின் சிவில் சமூகம் பலவீனம் அடைந்து காணப்படுகின்றது. எமது மக்கள் அறியாமை, வறுமை, பினி என பல சமூக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எமது மக்கள் தங்களைத் தாங்களே மாற்றிக் கொண்டால் எமது சிவில் சமூகம் பலம் பெற்றால் எமது நாடு பாதுகாக்கப்படும் இனிவரும் சுதந்திர தினங்களாவது அர்த்தமுள்ளதாக மாறும் என இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...