72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று காலை 6.30 மணிக்கு ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு நாளையும் (14) தொடரும் என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகளை தமக்கும் வழங்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுகாதார தொழிற்சங்கங்களின் போராட்டத்தில் சேவையை பெற்றுக் கொள்ள வைத்தியசாலையை நாடிய பல நோயாளர்கள் பெரிதும் அசெளகரியத்தை இன்று எதிர்கொண்டனர்.
இந் நிலையில் சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக 1,200 க்கும் மேற்பட்ட முப்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் சேவைகளைப் பேணுவதற்காக பணியமர்த்தப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் உறுதிபடுத்தியுள்ளார்.
பொதுமக்களின் நலன்கருதி போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்புமாறு சுகாதார தொழிற்சங்கத்திடம் சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக நிதியினை வழங்க முடியாது இருப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளதாகவும், மக்களின் நலன்கருதி அனைத்து வல்லுனர்களும் சேவைக்குத் திரும்ப வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.