களுத்துறை அட்டலுகம பிரதேசத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு 9 வயதான சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தும் நோக்கில் கடத்திச் சென்று சேற்றில் அமிழ்த்தி கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட என்ற குற்றவாளிக்கு 27 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சமன் குமார இன்று 27 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதுடன் கொல்லப்பட்ட சிறுமியின் தாயாருக்கு 30 லட்சம் ரூபா இழப்பீட்டை செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
பண்டாரகம, அட்டலுகம பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த கொலை சம்பவம் முழு நாட்டையும் உலுக்கிய கொடூரச் சம்பவமாக பதிவானது.
கோழி இறைச்சி வாங்குவதற்காக தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்குச் சென்ற 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா என்ற சிறுமி காணாமல் போன நிலையில், மறுதினம் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில், சிறுமியின் தந்தையின் நண்பர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் வழங்கியிருந்தார்.