‘மகப்பேறின்மை: கர்ப்பம் தரிப்பதற்கான போராட்டம்’ என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த திங்கட்கிழமையன்று (04), அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் ‘அபூ அய்மன் ஷுக்ரி’ எனும் ராஷித் யஹ்யா (நளீமி) எழுதி வெளியிட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் T.M.M.அன்சார் (நளீமி) தலைமையில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில், Dr.றயீஸ் முஸ்தபா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அம்பாறைப் பிராந்திய பிரதி மாகாண சுகாதாரப் பணிப்பாளர் Dr. ஐ.எல்.றிபாஸ் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டார்.
முன்னாள் மீள்பார்வை ஊடக மையத்தின் தலைமை ஆசிரியர் சிறாஜ் மஸூர் நூல் ஆய்வினை நிகழ்த்தினார்.
மகப்பேறின்மைக்கான காரணங்கள், மகப்பேறின்மையும் காலம் தாழ்த்திய திருமணங்களும், இஸ்லாமியப் பார்வையில் மகப்பேறின்மைக்கான சிகிச்சைகள், மகப்பேறைத் தாமதப்படுத்தல், கருத்தடை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுதல், கருக்கலைப்பு, வாடகைத் தாய், மகப்பேறின்மையும் விவாகரத்தும், இல்லற வாழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் தாக்கம், இலங்கைச் சூழலில் மகப்பேறின்மை போன்ற 20 தலைப்புகளில் சிறுசிறு அத்தியாயங்களாக இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
80 பக்கங்களுள் சிறிய அத்தியாயங்கள் மூலம், தொடர்புடைய பல தலைப்புகளைத் தொட்டுப் பேசும் அருமையான நூல். ஒரே மூச்சில் வாசிக்கும் அளவுக்கு கைக்கடக்கமாக உள்ளது.
நூலின் அட்டைப்படத்தை நூலாசிரியருக்கு நினைவுச் சின்னமாக அதன் வடிவமைப்பாளர் ஏ.ஆர்.சாஜித் அலி (Sajith Ali) வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.