இலங்கை-பாகிஸ்தான் நட்புறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர் இப்திகார் அஸீஸ் அவர்கள் நேற்றுக் காலமானதை முன்னிட்டு கொழும்பில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகராலயம் தனது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம் உல் அஸீஸ் மறைந்த இப்திகார் அஸீஸின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இப்திகார் அஸீஸ், பாகிஸ்தானின் சிறந்த நண்பராக இருந்ததோடு இலங்கை-பாகிஸ்தான் நட்புறவை மேம்படுத்துவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்றும் நினைவுகூரப்படக்கூடியவை என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான அவரது சேவைகளை பாராட்டும் வகையில், பாகிஸ்தான் அரசாங்கம் 2016 செப்டம்பர் மாதத்தில் “தம்கா-இ-கித்மத்” என்ற மதிப்புமிக்க பட்டத்தை இப்திகார் அஸீஸுக்கு வழங்கி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.