கடந்த சில நாட்களாக காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், மேற்கு கரையில் உள்ள அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தை தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐநா பணியாளர்களை ஏற்றி சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின.
இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
ஆனால், போர் தற்போது வரை முடிவுக்கு வரவில்லை. 34,000க்கும் அதிகமானோர் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். இதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான்.
மட்டுமல்லாது போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.
இதற்கிடையில் போர் நிறுத்தம் கோரி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பலஸ்தீன ஆதரவு நாடுகள் கொண்டுவரும் தீர்மானங்களை, அமெரிக்காவும், பிரிட்டனும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்து வருகிறது. எனவே இந்த போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் அபாயம் எழுந்திருக்கிறது.
இந்நிலையில் நேற்று திடீரென மேற்கு கரையில் தனது தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்புப் படை தீவிரப்படுத்தியது. மேற்கு கரையில் உள்ள அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் பொதுமக்கள் என பலஸ்தீன அரசு கூறியுள்ளது. ஆனால், உயிரிழந்தவர்களில் 10 பேர் பயங்கரவாதிகள் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருக்கிறது.