இலங்கையின் பாரிய நீர்ப்பாசனத் திட்டமாக வரலாற்றில் இடம்பெறும் “உமா திய ஜனனி” பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் இன்று (24) இலங்கை – ஈரான் ஜனாதிபதிகளினால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இந்த நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
இருநாட்டு தலைவர்களும் பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து “உமா தியா ஜனனி” பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்களிடம் கையளித்ததுடன், டிஜிட்டல் தொழில்நுட்ப முறையின் ஊடாக மின் உற்பத்தி இயந்திரங்களை இயக்கி பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.
அதனையடுத்து இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரானின் ஆதரவின்றி இலங்கையால் உமா ஓயாவிலிருந்து கிரிந்தி ஓயாவிற்கு நீரை கொண்டு சென்றிருக்க முடியாது.
அதற்காக ஈரான் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும், ஈரானுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்வதே நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
உலகின் தென் துருவ நாடுகள் தமது தனித்துவத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட விரும்புவதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அதற்காக தென்துருவ நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
அதனையடுத்து கருத்து தெரிவித்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, இந்த திட்டம் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவின் சின்னம் மட்டுமல்ல, ஆசிய வலய நாடுகளுக்கு இடையேயான அதிகபட்ச ஒத்துழைப்பு, ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கான அடையாளமாகும் என தெரிவித்தார்.
இலங்கையுடன் சிறந்த ஒத்துழைப்புடன் முன்னோக்கிச் செல்ல தயாரென உறுதியளித்த ஈரான் ஜனாதிபதி, இலங்கையின் பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு தொழில் நுட்ப மற்றும் பொறியியல் சேவைகளை வழங்குவதன் மூலம் இலங்கையின் முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் உதவத் தயாரெனவும் தெரிவித்தார்.
இலங்கையின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திக்காக கடந்த 45 வருடங்களில் ஈரான் பெற்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இலங்கையுடன் சிறந்த பங்காளித்துவத்துடன் முன்னோக்கிச் செல்ல ஈரான் தயாராக இருப்பதாக நான் உறுதியளிக்கிறேன்.” என்றார்.