ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளதாக ஐநா தெரிவித்திருக்கிறது.
மேலும், ஆயிரக்கணக்கானோர் இந்த வெள்ளத்தால் தங்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்திருக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் வெளிப்படையாக தெரிந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தான் பாதிப்புகளை எதிர்கொள்ள தொடங்கியுள்ளது.
வடக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. பாக்லான் மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களை இந்த வெள்ளம் கடுமையாக பாதித்திருக்கிறது.
ஆயிரக்கணக்கான மக்கள் தங்க இடமின்றி தவித்து வருகின்றனர். வெள்ளம் முழுமையாக வடிந்த பின்னர்தான் உயிரிழப்புகள் எவ்வளவு என்பது தெரிய வரும் என அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த வெள்ளம் திடீரென ஏற்பட்டவில்லை. ஏப்ரல் மாதத்தின் இறுதியில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் உருவானது. பின்னர் வடிந்துவிட்டது.
ஆனால், அவ்வப்போது பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் மதீன் கானி கூறுகையில், “பாக்லான் மாகாணத்தில் இன்னும் ஏராளமானோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
மீட்பு பணிக்காக ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன. எங்களால் மீட்பு பணியை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. எனவே இன்று காலை முதல் மீட்பு பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்.
காலநிலை மாற்றத்தின் விளைவுகளை தீவிரமாக எதிர்கொள்ளும் நாடுகளில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு கோடைக்காலத்தில் பிரிட்டன் எதிர்கொண்ட பிரச்னை காலநிலை மாற்றம் குறித்த விவாதங்களை தீவிரமாக்கியது. பிரிட்டன் அடிப்படையில் ஒரு குளிர் பிரதேசம்.
குளிர் காலங்களில் உறைபனி ஏற்படும். அதிகபட்சமாக 64 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்குதான் வெயில் இருக்கும். ஆனால், 2022ம் ஆண்டில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவானது.
இதனால் பிரிட்டன் மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகினர். இவ்வளவு வெப்பத்தை தங்கள் வாழ்நாளில் இதற்கு முன்னர் பார்த்ததே கிடையாது என்று கூறியிருந்தனர். காடுகள் தீ பிடித்து எரிந்தன.
அதே ஆண்டில் பாகிஸ்தானில் வரலாறு காணாத மழை பெய்தது. இதில் ஏறத்தாழ 2,000 பேர் வரை உயிரிழந்தனர்.
அதிகாரப்பூர்வமான உயிரிழப்பு 1,739 என்று சொல்லப்பட்டாலும் உள்ளூர் மக்கள் இதனை ஏற்கவில்லை.
மறுபுறம் சுமார் ரூ.32 லட்சம் கோடி வரை பொருள் இழப்பு ஏற்பட்டது. வீடுகள், தொழிற்சாலைகள், கால்நடைகள் என எல்லாம் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களும் காலநிலை மாற்றத்தின் எதிரெதிர் விளைவாக பார்க்கப்பட்டது.
இப்போது ஆப்கானிஸ்தான் காலநிலை மாற்றத்தின் சுழலில் சிக்கியிருக்கிறது. இதனை சரி செய்ய உலக நாடுகள் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.