சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் சந்திப்பில் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தில் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டார்.
இன, மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டதை அடுத்து, கடந்த 28ஆம் திகதி தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
இதேவேளை குறித்த கடிதத்தில் நாட்டிலுள்ள சிங்கள பௌத்த மக்களுக்காக ஞானசார தேரர் கடந்த காலங்களில் குரல் எழுப்பியிருந்ததாகவும், இனவாத குழுக்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரிவிற்கு தகவல்களை வழங்கியிருந்ததாகவும் மகாநாயக்க தேரர்கள் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டில் பரவிய இனவாதத்தை இல்லாது செய்ய அவர் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, எதிர்வரும் வெசாக் பௌர்ணமி தினத்தில் பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு, மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்