சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் 8,780 குடும்பங்களைச் சேர்ந்த 32,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 9 பிரதேச செயலகப் பிரிவில் 78 கிராம சேவகர் பிரிவில் 8,780 குடும்பங்களை சேர்ந்த 32,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 12 கிராம சேவகர் பிரிவில் 6,815 குடும்பங்களைச் சேர்ந்த 25,529 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது.
இதேவேளை, புத்தளம் – முந்தலம் பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்குண்ட மூன்று பேர் கொண்ட குடும்பத்தினை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் குடும்பம் சிக்குண்டிருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
பெரியகடவல ஏரியின் நீர் மட்டம் உயர்வடைந்ததன் காரணமாக முந்தலம் பிரதேசத்தில் வெள்ளம் ஏற்பட்டள்ளது.
இந்த நிலையில், சவாலான சூழ்நிலையாக இருந்தபோதிலும், கடற்படையினர் வெள்ளத்தில் சிக்குண்டிருந்த குடும்பத்தை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக தெரியவருகிறது.