ஆன்டிகுவா : கிரிக்கெட் உலகிலேயே எந்த ஒரு வீரரும் செய்யாத அரிய, மோசமான ஹாட்ரிக் சாதனையை வங்கதேச வீரர் மகமதுல்லா செய்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் தான் அவர் இந்த மோசமான சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் வங்கதேசம் டிஎல்எஸ் முறையில் 28 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். வங்கதேச அணியின் மகமதுல்லா, மெஹதி ஹாசன் மற்றும் தௌஹீத் ஹிருதோய் என மூன்று வங்கதேச வீரர்களை மூன்று பந்துகளில் வீழ்த்தினார்.
இதன் மூலம் டி20 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஏழாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் பாட் கம்மின்ஸ். இதில் சிக்கிய மகமதுல்லா உலகிலேயே வேறு எந்த வீரரும் அரிதில் செய்ய முடியாத ஹாட்ரிக் சாதனையை செய்தார். வங்கதேச அணியில் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை ஏழு முறை ஹாட்ரிக் விக்கெட் சாதனை வீழ்த்தப்பட்டு உள்ளது. அதில் மூன்று முறை மகமதுல்லா ஆட்டம் இழந்துள்ளார். அதாவது வங்கதேச அணிக்கு எதிரான மூன்று ஹாட்ரிக் விக்கெட் சாதனைகளில் அவரது விக்கெட்டும் இடம்பெற்று உள்ளது.
சர்வதேச டி20 வரலாற்றிலேயே அதிக முறை ஹாட்ரிக் விக்கெட்களில் சிக்கிய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார் மகமதுல்லா. அதுமட்டுமின்றி அவர் இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆறு முறை ஹாட்ரிக் விக்கெட்களில் சிக்கி தனது விக்கெட்டை இழந்து இருக்கிறார்.
சர்வதேச டி20 போட்டிகளில் மூன்று முறையும், ஒரு நாள் போட்டிகளில் இரண்டு முறையும், டெஸ்ட் போட்டிகளில் ஒரு முறையும் அவர் ஹாட்ரிக் விக்கெட்களில் தனது விக்கெட்டை இழந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை அதிக முறை ஹாட்ரிக் விக்கெட்களில் ஆட்டம் இழந்த வீரர் என்ற மோசமான சாதனையை செய்துள்ளார் மகமதுல்லா.