சிரேஸ்ட அரசியல்வாதியும் நவ சம சமாஜ கட்சியின் தலைவருமான கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன காலமானார்.
இவர் நீண்ட காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று (25) தனது 81 ஆவது வயதில் காலமாகினார்.
1943ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி லுணுகலையில் பிறந்த கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, மத்துகமவில் தனது ஆரம்பக் கல்வியையும், பின்னர் கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் பயின்றார்.
அதன்பின்னர் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்ததுடன், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1970ஆம் ஆண்டு கலாநிதி பட்டம் பெற்றார்.
விக்ரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பதுடன் கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக கொழும்பில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்.
மேலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனவர்கள் தொடர்பான நம்பிக்கை, இராணுவ கையிருப்பில் உள்ள நிலங்களை மக்களுக்கு மீள கையளித்தல் போன்ற விடயங்களை தனது அதிகாரத்தை கொண்டு தீர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் இவர் தெரிவித்திருந்தார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிராக குரல் கொடுத்த காரணத்தினால் அவர் தனது தொழிலை இழக்க நேரிட்டது.
1977ஆம் ஆண்டில் விக்ரமபாகு கருணாரட்ன நவ சமசமாஜ கட்சியில் இணைந்து கொண்டிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பல்வேறு இடதுசாரி கட்சித் தலைவர்களுடன் கடந்த காலங்களில் நெருக்கமான தொடர்புகளை பேணியிருந்தார்.
எங்கு அநீதி இழைக்கப்பட்டாலும், ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டாலும் அங்கு நீதியின் குரலாக நின்று களமாடிய ஒரு சிறந்த இடதுசாரி அரசியல் தலைவர் தான் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன.
2012 இல் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டுக்கு விக்கிரமபாகு கருணாரத்னவும் அழைக்கப்பட்டிருந்தார்.
இதனால் தென்னிலங்கையில் அவருக்கு எதிராக சில தரப்பினர் போர்க்கொடி தூக்கினர், போராட்டங்களை நடத்தினர்.