காசாவுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொள்கின்ற இன அழிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் KFC உணவகங்கள் முஸ்லிம்களால் சர்வதேச மட்டத்தில் புறக்கணிக்கப்படுகின்ற நிலையில் கனடாவில் இருக்கின்ற KFC உணவகங்களில் இனிமேல் ஹலால் கோழி உணவுகளை முழுமையாக வழங்குவதற்கும் அதன் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வதற்கும் KFC நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
அதற்கமைய இங்கிலாந்திலுள்ள ‘மிடில் ஈஸ்ட் ஐ’ இணையத்தளத்தின் பிரகாரம் கனடாவிலுள்ள KFC (Kentucky Fried Chicken) நிறுவனம் சமூக ஊடகங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தின் விளைவாக தன்னுடைய வியாபார உத்தியை மாற்றி முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்கு இஸ்லாமிய ஷரீஆ அடிப்படையிலான ஹலால் கோழி உணவுகளை வழங்க தீர்மானித்திருக்கிறது.
இதேவேளை மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் அமெரிக்காவின் பிரபலமான உணவுச் சங்கிலியான Starbucks மற்றும் McDonald’s போன்ற நிறுவனங்களும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளன.
காசா மீதான இஸ்ரேலின் போருக்கான அமெரிக்க ஆதரவை எதிர்த்து பல மாத கால புறக்கணிப்பு பிரச்சாரத்திற்கு மத்தியில் மலேசியாவிலும் KFC அதன் 100க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களை மூடியது.