ஹமாஸ் தலைவர் ஹனியா கொல்லப்பட்ட சம்பவம் குறித்த தனது ஃபேஸ்புக் பதிவை, ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளதற்கு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஆகஸ்ட் 1ஆம் திகதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், ஹமாஸ் அதிகாரிகளுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் குறித்த காணொளி ஒன்றை தனது ஃபேஸ்புக்கில் பதிவேற்றி இருந்தார். அந்தப் பதிவை ஃபேஸ்புக் நிறுவனம் அகற்றிவிட்டது.
அந்தச் செயல் கோழைத்தனமானது என்று அன்வார் சாடியுள்ளார். ஜூலை 31 ஆம் திகதி ஈரானில், ஹமாஸ் தலைவர் ஹனியே படுகொலை செய்யப்பட்டதால் காஸா மோதல் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அன்வார், கடந்த மே மாதம் கத்தாரில் தாம் ஹமாஸ் தலைவர் ஹனியேயைச் சந்தித்துப் பேசியதாகவும், தனக்கு ஹமாஸ் அரசியல் தலைவர்களுடன் நல்ல நட்புறவு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், ராணுவ ரீதியில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
“இது மெட்டாவுக்கு தெளிவான, சந்தேகத்திற்கு இடமில்லாத செய்தியாக அமையட்டும். கோழைத்தனமான இதுபோன்ற செயலை நிறுத்திக்கொள்ளுங்கள்,” என்று அன்வார் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அன்வாரின் பதிவுக்கு ஃபேஸ்புக் தளத்தின் மெட்டா நிறுவனம் உடனடியாகப் பதில் ஏதும் அளிக்கவில்லை.
இதுகுறித்து மெட்டாவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. புகார் வந்ததால் பதிவுகள் நீக்கப்பட்டதா அல்லது அந்நிறுவனத்தால் நீக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று மலேசிய அமைச்சர் ஃபாய்மி பாட்சில் கூறியுள்ளார்.
மெட்டா பாலஸ்தீனியக் குழுவான ஹமாஸை “ஆபத்தான அமைப்பாக” நியமித்துள்ளதுடன் அதைப் புகழ்ந்து பேசும் உள்ளடக்கத்தையும் தடை செய்துள்ளது.
பிரதமரின் முகநூல் பதிவு ஏன் நீக்கப்பட்டது என்பது குறித்து METAவிடம் விளக்கம் கேட்டுள்ளதாக மலேசிய தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாய்மி பாட்சில் தெரிவித்துள்ளார்.