எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாகப் போட்டியிடும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு நிபந்தனையுடனான ஆதரவை வழங்குவதென, கட்சியின் உயர்பீட உறுப்பினர்களால் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (04) கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் இத்தீர்மானதை எடுத்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் மூன்று விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, சஜித் பிரேமதாஸவுடன் எதிர்வரும் 72 மணித்தியாலங்களுக்குள் பேச்சுவார்த்தையை நடாத்தி தமது தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இக்கூட்டத்தில், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், மரிக்கார் உள்ளிட்ட மு.கா. பிரபலங்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் – கலகெதர தொகுதி – அமைப்பாளரான ரவூப் ஹகீம் , ஒட்டுமொத்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களையும் தான் அங்கம் வகிக்கும் கட்சிக்கு அடிமைகளைப்போல அழைத்துச் சென்றதாக வடமேல் மாகாண ஆளுநர் ஹாபீஸ் நஸீர் அஹ்மத் குற்றம் சுமத்தியுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சிக்கு – ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் ஒருவர் தலைமை தாங்குவது எவ்வளவு வெட்கக் கேடான விடயம் என்றும் நஸீர் அஹ்மத் குறிப்பிட்டுள்ளார்.