தேசிய மக்கள் சக்தியில் இருந்து நீங்கிக் கொண்டதன் பின்னர் இம்முறைய ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் வெள்ளியன்று (16) ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கவிருப்பதாக கட்சியின் தலைவர் நஜா முஹம்மத் தெரிவித்தார்.
‘எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய கட்சியின் நிலைப்பாடு” குறித்த முடிவுகளை எட்டும் நோக்கில் சமூக நீதிக் கட்சியின் தேசிய செயற்குழு அங்கத்தவர் மாநாடு சனிக்கிழமை (10) கூடியது.
கட்சியின் தலைவர் நஜா முஹம்மதின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், நாடளாவிய ரீதியில் உள்ள கட்சியின் தேசிய செயற்குழு அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.
இம் மாநாட்டில் மாற்று அரசியல் வேலைத்திட்டம் ஏன் அவசியம் என்பது குறித்து கட்சியின் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் உரையாற்றியதோடு தேசிய மக்கள் சக்தி கூட்டணியில் இருந்து சமூக நீதிக் கட்சி விலகியது குறித்த தெளிவினை கட்சியின் தலைவர் நஜா முஹம்மத் முன்வைத்தார்.
சமூக நீதிக் கட்சி வகுத்துள்ள, ’10 அடிப்படைக் கொள்கைகள் ‘ அங்கத்தவர்களிடம் முன்வைக்கப்பட்டு கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதோடு கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்த திட்டங்களும் முன்வைக்கப்பட்டு, அவர்களுடைய கருத்துக்களும், ஆலோசனைகளும் உள்வாங்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
கட்சியின் மகளிர் கட்டமைப்பினை விரிவுபடுத்துவது குறித்த ஆலோசனைகளும் கட்சியின் மகளிர் அணி பொறுப்பாளரும் முன்னாள் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான திருமதி ரிஸ்ரினா இஸ்மாலெப்பையினால் முன்வைக்கப்பட்டன.
ஜனாதிபதித் தேர்தல் குறித்து கட்சி எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் பற்றி, தேசிய செயற்குழு உறுப்பினர்களின் அபிப்பிராயங்கள், திறந்த கலந்துரையாடல் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டு, விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு, தீர்க்கமான முடிவுகளும் எட்டப்பட்டன.
மாநாட்டில் இறுதியில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட சமூக நீதிக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் குறித்த நிலைப்பாடு வெள்ளியன்று (16) ஊடகங்கள் மூலம் அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை கட்சி எடுத்து வருகிறது.