பங்களாதேஷில் ) பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலக வலியுறுத்தி மாணவ அமைப்பினர் நேற்று நடத்திய போராட்டத்தில் 98 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்களாதேஷ் அரசாங்கத்தின் நிறைவேற்று உத்தரவின் பேரில் இன்று திங்கட்கிழமை (05) முதல் மூன்று நாட்கள் பொது விடுமுறையை அறிவித்துள்ளது.
வன்முறை மோசமடைந்து வரும் நிலையை கருத்தில் கொண்டு தலைநகர் டாக்காவில் தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், இன்று காலை 6 மணி முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் முழுவதும் பரவலான வன்முறைகளுக்கு மத்தியில், மாணவர்களுக்கும், ஆளுங்கட்சியினர், மற்றும் காவல்துறையினருக்கும் இடையே கடந்த மாதம் நடைபெற்ற வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
பங்களாதேஷில் சுதந்திர போரில் பங்கெடுத்த வீரர்களின் வம்சாவளிகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால், போராட்டம் கைவிடப்பட்டது.எனினும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தீவிரவாதிகள் என பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதற்கு, கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து ஷேக் ஹசீனாவை பதவி விலக வலியுறுத்தி மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.
இந்த போராட்டங்களில் ஈடுபட்ட வன்முறைகளில் சிக்கி 14 காவலர்கள் உட்பட 98 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் அமைப்பினால் மேற்கொள்ளப்படும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் முன்னாள் இராணுவ அதிகாரிகளும் மேலும், திரைப்பட நட்சத்திரங்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் உட்பட பெரும்பாலானோர் ஈடுபட்டுள்ளனர்.