இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட Beechcraft King Air 360ER விமானம் அடுத்த வாரம் இலங்கையை வந்தடையுமென்பதை இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் Building Partner Capacity நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்பட்ட இந்த நன்கொடையானது, 2019 இல் ஆரம்பிக்கப்பட்டு இலங்கை விமானப்படையுடன் நீண்டகால ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக உள்ளது என அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், போதைப்பொருள் தடுப்பு, கடத்தல் மற்றும் கள்ளக்கடத்தலை முறியடித்தல் ஆகியப் பொறுப்புகளில் இலங்கையின் திறன்களை அதிகரிக்க, இந்த மேம்படுத்தப்பட்ட விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நன்கொடையானது, அமெரிக்க இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பைப் மேலும் வலுப்படுத்தும் மற்றும் நாட்டின் கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையிலானது.
19 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியுள்ள இந்த விமானம், விமானம் மற்றும் அதற்கான தேவையான உதவிச் சேவைகளை உள்ளடக்குகிறது.
விமானத்தின் அறிமுகம் மற்றும் இயக்கப் பயிற்சிகள் நிறைவடைந்த பின்னர் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விமானத்தை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் இலங்கை அதிகாரிகள் முழுமையாகத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்த அமெரிக்க அதிகாரிகள் மூன்று மாத பயிற்சியை நடத்துவார்கள்.