வட கொரியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், கடமை தவறிய குற்றத்திற்காக 30 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூலை மாதம் பலத்த மழை காரணமாக அந்நாட்டின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதுடன், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால், 4 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன.15 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர்
இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவை தடுக்க அதிகாரிகள் தவறிவிட்டனர் என்றும் அவர்கள் கடமையை சரியாக செய்யாததால், பேரிழப்பு ஏற்பட்டு உள்ளதுடன் அவர்கள் ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளனர்.
அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றும்படி கிம்ஜாங் உன் உத்தரவிட்டதுடன் இதனையடுத்து, உயர் அதிகாரிகள் உட்பட 30 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
வட கொரியாவில் மலைகளில் உள்ள காடுகள் அழிக்கப்படுவதால், வெள்ளம் ஏற்படும் ஆபத்து அதிகம் என்றும் அதன் கட்டமைப்பும் இயற்கை சீற்றங்களை அவ்வளவாக தாங்கக்கூடியதாக இல்லை என்றும் ஏற்கனவே ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர்.
அதற்கேற்றவாறு, சமீபகாலமாகவே வடகொரியாவை கனமழையும், வெள்ளமும் புரட்டி போட்டு வருகிறது.
அதிலும் கடந்த ஜூலை மாதம் எதிர்பார்க்காத அளவுக்கு, பேய்மழை பெய்தது. இதனால், வட கொரியாவின் சினுய்ஜு நகரத்திலும், சீனாவின் எல்லைக்கு அருகிலுள்ள பியாங்யான் மாகாணத்தின் உய்ஜு பகுதியிலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.
இதனால், வடகொரிய அதிபர் கிம் ஜான் உன், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு ரப்பர் படகில் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.
கிட்டத்தட்ட 7 ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதை கண்டும், ஏராளமான வீடுகள், கட்டடங்கள், சாலைகள் அனைத்தையும் வெள்ள நீர் சூழ்ந்திருந்ததை கண்டும் வேதனையுற்றார்.