இலங்கையின் புதியஅதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு தமிமுன் அன்சாரி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
தெற்காசியாவின் அழகிய தீவு நாடான இலங்கையில் நேற்று நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் இடதுசாரி சிந்தனைகளை பின்னணியாக கொண்ட ஜனதா விமுக்கி பெரமுனா கட்சியின் தலைவர் அனுரா குமார திசாநாயக்க அவர்கள் 55.87 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றிருக்கிறார்.
முதன்மை வாக்குகளிலும், விருப்ப வாக்குகளிலும் அவரே முன்னிலை பெற்று இந்த வெற்றியை சாதித்து இருக்கிறார்.
38 வேட்பாளர்களில் அவருக்கும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவிய சூழலில்; அவரது வெற்றி இலங்கை மக்களின் மாற்று அரசியலுக்கான வெற்றியாக கருதப்படுகிறது.
27 அமைப்புகள், சிறு கட்சிகளை இணைத்து தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டணி அமைத்து ‘மாற்றம் ஒன்றே தீர்வு ‘என்ற முழக்கத்தை அவர் முன் வைத்ததும்’ வளமான நாடு – அழகான வாழ்க்கை ‘என்ற கவர்ச்சிகர உத்தரவாதத்தை அளித்ததும் அவரது வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறது.
எதிர்க்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தி முன்னணியின் தலைவருமான சஜித் பிரேமதாசா அவர்களுக்கு மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தமிழரசு கட்சி, மலையக முன்னணி ஆகிய தமிழர் மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
இலங்கையின் இனவாத கட்சியாகவும், தமிழர் மற்றும் முஸ்லிம்கள் மீது விரோதம் பாராட்டும் கட்சியாகவும் கருதப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் சார்பில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்சேவின் மகன் அமல் ராஜபக்சே அவர்களும், சில தமிழர் அமைப்புகளுடன் அமைத்த கூட்டணியில் போட்டியிட்ட பாக்கிய செல்வம் அரிய நேத்திரன் அவர்களும் நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புதிதாக இலங்கையின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள அனுர குமார திசாநாயக்க அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர் இலங்கையின் இனவாதத்தை முழுவதுமாக ஒழித்து ; சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற மூவின மக்களையும் சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் வழிநடத்தும் மிகப் பெரிய பொறுப்பை ஏற்று இருக்கிறார்.
இது ஒரு நூற்றாண்டு கனவு என்றும் ; சிங்களர், தமிழர், முஸ்லிம்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமையே நமது தொடக்கத்தின் அடித்தளம் என்றும் எல்லோரும் ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை கட்டமைப்போம் என்றும் ; கூறியிருக்கும் அவரது வார்த்தைகள் நம்பிக்கை அளிக்கிறது.
இலங்கையின் இன சிக்கல்களை தீர்த்து; அமைதியும், சமூக நீதியும் நிறைந்த நாடாக அதனை கட்டமைத்து; பொருளாதார வளர்ச்சியில் அவர் முனைப்பு காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
புவிசார் அரசியல் என்ற நிலையில், அவர் இந்தியாவுடன் சுமூகமான உறவை பராமரிக்க வேண்டும் என்பதும் நம்முடைய விருப்பம் ஆகும்.
குறிப்பாக இந்திய – இலங்கை கடல் பகுதியில் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் தமிழ்நாட்டு மீனவர்களின் நலன்கள் மீதும் அவர் உரிய அக்கறை காட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.