லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 274 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 300 இடங்களை இலக்கு வைத்து வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலின் போது மேலும் 1000இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகலெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீதான தாக்குதல்களுக்கு இராணுவ தளபதி ஹெர்சி ஹலேவி அனுமதி வழங்கியுள்ளதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஹெர்சி ஹலேவி மற்றும் பிற இஸ்ரேல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸை அழிப்பதாக கூறி காசாவை நாசம் செய்ததை போல, ஹிஸ்புல்லாவை அழிப்பதாக கூறி தற்போது லெபனான் மீது தாக்குதலை தொடுத்திருக்கிறது இஸ்ரேல். இதில் அந்நாட்டு ராணுவம் பயன்படுத்திய யுக்தி போரின் வரைமுறைகளை மீறுவதாக இருப்பதாக லெபனான் விமர்சித்துள்ளது.
கடந்த ஓராண்டில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது நடந்த மிகப் பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. ஹிஸ்புல்லா அமைப்பின் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்த உள்ள நிலையில், லெபனானில் உள்ள மக்கள் உடனடியாக தங்கள் வீடுகள் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களைச் சேமித்து வைத்திருப்பதாகக் கூறப்படும் கட்டிடங்களை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளது.