இஸ்லாமிய உலகின் குறிப்பாக சவூதி அரேபியாவின் மூத்த அறிஞர்களில் ஒருவரும் மறைந்த சவூதி அரேபியாவின் முப்தி ஷேக் பின்பாஸ் அவர்களின் நீண்டகால மாணவரும் அல்இமாம் பல்கலைக்கழ முன்னாள் விரிவுரையாளருமான கலாநிதி அஷ்ஷெக் உமர் பின் சவூத் அல்ஈத் அவர்கள் நேற்று (18) நோயுற்ற நிலையில் காலமானார்.
இலங்கையிலும், உலகின் பல நாடுகளிலும் இஸ்லாமிய அறிவுக்கும் போதனைக்குமான தொடர் பிரயாணங்களை மேற்கொண்டு பல்லாயிரக்கணக்கான உலமாக்கள், மாணவர்கள் மத்தியில் தனது ஆழ்ந்த அறிவாலும் பரந்த சிந்தனைகளாலும் தெளிவுகளையும் விளக்கங்களையும் பல்வேறு கலந்துரையாடல்கள் கருத்தரங்குகள் ஊடாக ஷேக் அவர்கள் வழங்கி வந்தார்.
இலங்கையிலும் அன்னார் பல தடவைகள் பயணங்களை மேற்கொண்டு அரபுக் கல்லூரி, மூத்த உலமாக்கள், தலைமைகள் என்ற பல தரப்பினர் மத்தியிலும் நிகழ்ச்சிகளை நடாத்தியுள்ளார்.
குறிப்பாக ஷாபி மத்அபுடைய கோட்பாட்டின் அடிப்படையில் தெளிவுகளை வழங்குவதில் ஷேக் அவர்கள் சிறப்புற்று விளங்கினார். முஸ்லிம் சமூகத்தின் சிவில்மற்றும் அரசியல் தலைமைகளுக்கும் தனது சந்திப்புக்களின் போது பயனுள்ள வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளார்.
அரபு மொழியில் அன்னாருடைய விரிவுரைகளும் வகுப்புக்களும் தாரளாமாக சமூக வலைத்தளங்களினூடாக பிரபல்யம் பெற்றுள்ளமை அவரது சிறந்த பணிக்கு எடுத்துக்காட்டாகும்.
ஷேக் உமர் அவர்களின் ஜனாசா சவூதி அரேபியா தலைநகர் ரியாத் நகரில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
அன்னாரின் சிறப்பான பணிகளை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக…!