21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கச் செல்ல பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம்கள், முஅத்தின்கள் மற்றும் பணியாளர்களுக்கு விடுமுறை வழங்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம்கள், முஅத்தின்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் முஸ்லிம் சமய திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தேர்தலில் வாக்களிக்க சந்தர்ப்பம் மறுக்கப்படுவது தேர்தல் விதிமுறைகள் மற்றும் தனிமனித உரிமை மீறல் என்பவற்றை கருத்தில் கொண்டு 2024.09.19 ஆம் திகதி இலங்கை வக்பு சபையின் WB/10009/2024 தீர்மானித்திக்கு அமைய அனைத்து பள்ளிவாசல்கள், தக்கியாக்கள், சாவியாக்களில் பணிபுரியும் முஅத்தின்கள், இமாம்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தமது ஊர்களுக்குச் செல்ல விஷேட விடுமுறை வழங்கும் படி பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் நம்பிக்கை பொறுப்பாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.