2014ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அத்தனகல்ல தேர்தல் தொகுதியிலுள்ள கல்விக்கும் அபிவிருத்திக்குமான அல் இமாம் சாபி நிலையத்தில் இயங்கி வருகின்ற அல்ஹிக்மா மாலை நேர குர்ஆன் பாடசாலை மாணவியர்களுக்கான முழுநாள் சுற்றுலா ஒன்று நேற்று( 19) மேற்கொள்ளப்பட்டிருந்தது.
புத்தளத்துக்கு வருகைத் தந்த இம் மாணவர்கள் புத்தளத்தின் முக்கியமான பகுதிகளைப் பார்வையிட்டனர்.
குறிப்பாக உப்பளம் மற்றும் காற்றாலை மின்சாரம், அதனைத்தொடர்ந்து அனுராதபுர வீதியில் அமைந்திருக்கின்ற நீச்சல் தடாகம் அமையப்பெற்றுள்ள இடத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர்கள் ஈடுபட்டனர்.

இதன்போது நீச்சல் தடாகத்தில் மாணவியர்கள் தனித்தனியாக நேரங்களை கழித்ததுடன் பல்வேறு விளையாட்டுக்களிலும் ஈடுபட்டனர். அதேவேளையில் பிள்ளைகளின் பாதுகாவலர்களாக வந்திருந்த பெற்றோரும் சுவாரஷ்யமான பல விளையாட்டுக்களில் ஈடுபட்டனர்.
இறுதி நிகழ்ச்சியாக மாணவர்களின் கலைநிகழ்ச்சி இடம்பெற்றது. இதன்போது பாடல்கள், கிராஅத் ,கவிதைகள், பேச்சு உட்பட பல நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன.
புத்தளம் நகரில் அமைந்திருக்கின்ற அல் கலம் குர்ஆன் பாடசாலையின் மாணவர்களும் கலந்துகொண்டு அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை மற்றொரு விசேட அம்சமாகும்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் கல்விப்பணிப்பாளர் இஸட் ஏ.எம். ஸன்ஹீர், புத்தளம் நகர ஜம்இய்யதுல் உலமா நகரக் கிளை தலைவர் அஷ்ஷெய்க் ஜிப்னாஸ், அல்கலம் குர்ஆன் பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க். பௌஸான் , மாவனல்லை ஆயிஷா சித்தீகா கலாபீடத்தின் விரிவுரையாளர் கலாநிதி பாரிஸ், அரசியல் செயற்பாட்டாளர் இஷாம் மரிக்கார் ஆகியோரும் கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்து பரிசில்களும் வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் விசேட அம்சமாக காசாவின் தற்போதைய நிலை பற்றிய ஒரு குறுநாடகம் மாணவர்களால் அரங்கேற்றப்பட்டது. இந்நாடகம் கலந்துகொண்ட அனைவரையும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விடும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியமை மற்றொரு விசேட அம்சமாகும்.
இறுதி நிகழ்ச்சியை அஷ்ஷைக். பவ்ஸான் இஸ்லாஹி நெறிப்படுத்தியதுடன்
இமாம் சாபி நிலைய முகாமையாளர். அஷ்ஷைக் முஹிதீன் இஸ்லாஹியின் நன்றி உரையுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.