ஷூரா சபையின் தலைவர் அஷ்ஷைக் எஸ்.எச்.எம். பளீல் அவர்களது தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ், அரசியல் விவகாரங்களுக்கான உபகுழுவின் தலைவர் ஷாம் நவாஸ் ஆகியோரும் உரைகளை நிகழ்த்தினர்.
உப தலைவர்களான சட்டத்தரணி ஜாவித் யூசுப், எம்.எச் எம். ஹசன் ஆகியோருடன் சூரா சபையின் செயற்குழு மற்றும் செயலகக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன், பேராசிரியர் ரஸீன் பாபு, சிரேஷ்ட சட்டத்தரணி நத்வி பஹாவுத்தீன்,முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த உலமாக்கள், புத்திஜீவிகள், சட்டத்தரணிகள், சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள், அரசியல் ஈடுபாடுள்ளவர்கள் என சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம்.ஹகீம், Concerns and Constrains of the Present Constitution – The way forward (தற்போதைய அரசியல் யாப்பில் உள்ள அக்கறைகளும் நிர்பந்தங்களும்) என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம். எம். பாஸில் அவர்கள் “Muslim Minority Concerns a Critical Perspective” (முஸ்லிம் சிறுபான்மையினரது அக்கறைகள் முக்கியமான ஒரு கண்ணோட்டம்) என்ற தலைப்பிலும், A Muslim perspective on Enshrining and protection and promoting Equality via constitutional Reforms “(அரசியல் யாப்பு சீர்திருத்தங்களில் சமத்துவத்தை இணைத்தல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல் பற்றிய முஸ்லிம்களது முன்னோக்கு) என்ற தலைப்பில் சட்டத்தரணி மாஸ் யூஸுப் அவர்களும் விஷேட ஆய்வுரைகளை நிகழ்த்தினர்.
அதன் பின்னர் குழுக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இறுதியில் எதிர்காலத்தில் ஐந்து கட்ட வேலை திட்டங்களை முன்னெடுப்பதற்காக 10 பேர் கொண்ட ஒரு செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இலங்கையின் அரசியல் யாப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கருத்து பல மட்டங்களிலும் தெரிவிக்கப்பட்டு வருவதனால் தற்போதைய அரசும் இது தொடர்பாக முயற்சிகளை செய்து வரும் சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகள், தனித்துவங்கள் என்பவற்றை கருத்திற் கொண்ட நிலையில் அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் முன்மொழியப்பட வேண்டும் என்ற கருத்தில் தேசிய சூரா சபை இருப்பதனால் இத்தகைய முன்மொழிவுகளை உள்ளடக்கிய அறிக்கையொன்று தயார் செய்யப்படுவற்கான சிந்தனைக் கிளர்வு நிகழ்வாக இந்த பயிற்சி பட்டறை அமைந்தது.
முஸ்லிம் சமூகத்தில் உள்ள துறைசார் வல்லுனர்கள், அரசியல் யாப்பு தொடர்பான ஆழிய அறிவு கொண்டவர்கள், மற்றும் புத்திஜீவிகளது கருத்துக்களை உள்வாங்கிய நிலையில் முறையாகவும் ஒழுங்காகவும் இந்த ஆவணம் தயாரிக்கப்பட வேண்டும் என்ற வகையில் அந்த முயற்சியின் முதல் கட்டமாக மேற்படி பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
தெரிவு செய்யப்பட்ட செயற்குழு, முஸ்லிம் சமூக நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகள் போன்றது கருத்துக்களை சேகரிக்க இருப்பதுடன் ஏற்கனவே முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத அமைப்புக்கள் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட இது தொடர்பான அறிக்கைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி தமது பணியை மேற்கொள்ளவிருக்கிறது. கால தாமதமின்றி இயன்றவரை அவசரமாக அக்குழு இப்பணியை அவசரமாக நிறைவு நிறைவு செய்ய வேண்டும் என தேசிய சூரா சபை வேண்டியிருக்கிறது.















