அடுத்த ஆண்டுக்கான ஹஜ் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஹஜ் குழுவினை புத்தசாசன, மத மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி நியமித்துள்ளார்.
புதிய ஹஜ் குழு தலைவராக சமூக செயற்பாடுகளில் முன்னின்று செயற்பட்டு வரும் பட்டயக் கணக்காளர் ரியாஸ் மிஹ்லார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கே.பி எம்.ஜி சர்வதேச கணக்காய்வு நிறுவனத்தின் (Audit Firm) மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவுக்கான பிராந்திய பொறுப்பாளாரான இவர் ஸ்ரீலங்கா டெலிகொம், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகம் ஆகியவற்றின் தலைவராகவும் Bairaha , நெஸ்லே உள்ளிட்ட பல பெரு வணிகங்களில் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்தக்குழுவின் ஏனைய அங்கத்தவர்களாக விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் செயலாளரும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் வை.எல்.எம். நவவி, சிரேஷ்ட சட்டத்தரணியும் தேசிய சூரா சபையின் முன்னாள் தலைவரும் இலங்கை மலே கூட்டமைப்பின் தலைவருமான டி.கே. அசூர், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சுற்றுலா முகாமைத்துவ பேராசிரியர் எம்.எஸ்.எம். அஸ்லம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் என்ற வகையில் எம்.எஸ்.எம். நவாஸ், தொழிலதிபர் அல்ஹாஜ் பௌசுல் ஹக் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஹஜ் குழுவின் தலைவராக இருந்த ஓய்வுபெற்ற இராஜதந்திரியான சட்டத்தரணி இப்ராஹிம் அன்சார் அவர்களினால் ஹஜ் முகவர்களுக்கு பகிரப்பட்ட ஹஜ் கோட்டாக்களை இரத்து செய்து விட்டு புதிதாக நேர்முகப் பரீட்சை நடத்தி கோட்டாக்களை பகிருமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.
இதன்பின்னரே புதிய அரச ஹஜ் குழு தற்போது நியமிக்கப்பட்டுள்ளது.